ஹட்டன் பேருந்து விபத்து - சாரதிக்கு விளக்கமறியல் !


ஹட்டன் மல்லியப்பு பகுதியில் நேற்று (21) இடம்பெற்ற தனியார் பயணிகள் பேருந்து விபத்தில் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த பேருந்தின் சாரதியை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். ராம்மூர்த்தி இன்று (22) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

வைத்தியசாலைக்கு சென்ற பதில் நீதவான், சந்தேகநபரான சாரதியின் நிலை குறித்து வைத்தியர்களிடம் கேட்டறிந்து இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதன்படி, சந்தேகநபர் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நேற்று (21) காலை ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இந்த பேருந்து மல்லியப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது.

வளைந்து செல்லும் வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் விழுந்தது.

இந்த விபத்தில் சாரதி, உதவியாளர் உட்பட 53 பேர் படுகாயமடைந்த நிலையில், 3 பேர் உயிரிழந்தனர்.

ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும், கண்டியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரும், பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.

ஹட்டன் தோட்டப்பகுதியைச் சேர்ந்த தேவராஜ் தினேஷ்குமார் என்ற 14 வயது சிறுவனின் சடலம் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் தாய் சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருவதாகவும், அவர் நாடு திரும்பியதும் இறுதி சடங்குகள் இடம்பெறும் என குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.