கொழும்பு - கண்டி வீதியின் உத்துவன்கந்த பிரதேசத்தில் கண்டி நோக்கிச் சென்ற லொறியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
குறித்த லொறி விபத்தின் காரணமாக, மற்றுமொரு லொறியும் இரண்டு கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியின் சாரதியும் உதவியாளரும் உணவு உண்பதற்காக ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் லொறியை நிறுத்தியுள்ளனர்.
இதன்போது, கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த லொறியொன்று, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கத்தால் பாதையின் வலது புறமாக நிறுத்தப்பட்டிருந்த மேற்படி லொறியில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சேத விபரங்கள் மதிப்பிடப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.