வாடகைக்கு பெற்ற சொகுசு வாகனங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த போலி வைத்தியர் கைது !


வாடகைக்கு பெற்ற சொகுசு வாகனங்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்த போலி வைத்தியர் ஒருவர் நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் , பாமன்கட பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து BMW மற்றும் KDH ஆகிய இரண்டு சொகுசு வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் கொட்டாவை பிரதேசத்தில் உள்ள கார் வாடகை நிறுவனம் ஒன்றிலிருந்து வாடகைக்கு பெற்ற KDH ரக சொகுசு வாகனம் ஒன்றிற்கு போலி ஆவணங்களை தயாரித்து அதனை மீரிகம பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் , முல்லேரியா பிரதேசத்தில் உள்ள கார் வாடகை நிறுவனமொன்றில் இருந்து வாடகைக்கு பெற்ற BMW ரக சொகுசு வாகனம் ஒன்றிற்கு போலி ஆவணங்களை தயாரித்து அதனை பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள கணக்காளர் ஒருவருக்கு ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.