மட்டக்களப்பில் கைப்பற்றப்பட்ட பாவனைக்கு உதவாத 481 மென்பான போத்தல்கள் !


மனித பாவனைக்கு உதவாத செயற்கையான பொருட்கள் சேர்க்கப்பட்ட சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பெருமளவிலான மென்பான போத்தல்கள் மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 481 மென்பான போத்தல்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.முரளீஸ்வரனின் ஆலோசனையின் பேரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ. உதயகுமாரின் வழிகாட்டலில் கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தலைமையிலான பொதுச் சுகாதார அதிகாரிகள் மேற்படி திடீர் தேர்தலை நடாத்தி குறித்த சட்டவிரோத மனித பாவனைக்குதவாத மென்பானங்களை கைப்பற்றியிருந்தனர்.

பென்சாயிட் அசிட் எனப்படும் ஒரு விதமான மனித பாவனைக்கு உதவாத திரவம் குறித்த மென்பான போத்தல்களில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் பொருத்தம் இல்லாத நிலக்கலவையும் இதில் இணைக்கப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் குறித்த மென்பான தயாரிப்பு நிறுவனம், வினியோகஸ்தர், விற்பனையாளர் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்தனர்.

இதன் போது விற்பனையாளர் மற்றும் விநியோகஸ்தர் ஆகியோருக்கு தலா 15,000 வீதமும் உற்பத்தியாளருக்கு 30 ஆயிரம் ரூபாயுமாக 60 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.

குறித்த மென்பானத்தை கைப்பற்றப்பட்ட மென்பானங்களை அழிக்குமாறும் ஏனைய விற்பனை நிலையங்களில் இருக்கும் பானங்களை அகற்றுமாறும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்ஷினி உத்தரவிட்டார் .

இதற்கமைய கைப்பற்றப்பட்ட மனித பாவனைக்கு உதவாத மென்பான போத்தல்கள் நேற்று (20) காலை அழிக்கப்பட்டன.