பாடசாலை மாணவனிடம் 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த இருவர் கைது !


14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனுக்கு கையடக்கத் தொலைபேசி வாங்கித் தருவதாகக் கூறி 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.

பயாகல மற்றும் மக்கொன ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 மற்றும் 21 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவது,

இந்த பாடசாலை மாணவன் தனது தந்தை மற்றும் இரண்டு மூத்த சகோதரிகளுடன் பயாகல பிரதேசத்தில் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், பாடசாலை மாணவன் தனது தந்தை வாங்கிக் கொடுத்த கையடக்கத் தொலைபேசியை தொலைத்துள்ளார்.

இதனால் இந்த பாடசாலை மாணவன் தனது அயல் வீட்டில் வசிக்கும் நண்பனின் மூத்த சகோதரனிடம் தனக்கு ஒரு கையடக்கத் தொலைபேசியை வாங்கித் தருமாறு கோரியுள்ளார்.

இதன்போது, சந்தேக நபர் , கையடக்கத் தொலைபேசியை வாங்கித் தருவதற்கு பணம் அல்லது தங்க நகைகள் வேண்டும் என பாடசாலை மாணவனிடம் கூறியுள்ளார்.

இதனால் இந்த பாடசாலை மாணவன் வீட்டில் உள்ள அலுமாரியில் இருந்த சுமார் முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சந்தேக நபருக்கு கொடுத்துள்ளார்.

பின்னர், சந்தேக நபர் இந்த நகைகளை அடகு வைத்து 17 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு இந்த பாடசாலை மாணவனுக்கு கையடக்கத் தொலைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபர் மீதி பணத்தை பயன்படுத்தி இடைத்தரகர் மூலம் வாடகை அடிப்படையில் கார் ஒன்றை பெற்றுக் கொண்டு, நாடு முழுவதும் சுற்றுலாச் சென்று கையடக்கத் தொலைபேசிகள் , கேமராக்கள், விலை உயர்ந்த வாசனை திரவியங்கள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கியுள்ளார்.

வீட்டில் தங்க நகைகள் காணாமல் போயிருப்பதை அவதானித்த பாடசாலை மாணவனின் பெற்றோர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் , சந்தேக நபர்கள் இருவரும் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்