புகைப்படத்துடன் விடைபெற்ற மஹிந்தவின் 116 பாதுகாப்பு அதிகாரிகள் !


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த 116 மேலதிக பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று தமது கடமைகளை நிறைவுறுத்திக் கொண்டு வெளியேறியுள்ளனர்.

அதற்கமைய, நேற்றைய தினம் குறித்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியுடன் இறுதி புகைப்படத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தது.

இதன் ஒரு கட்டமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காகப் பிரதான பாதுகாப்பு அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் சாரதிகள் உள்ளிட்ட 60 பேர் மாத்திரமே பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கவலையான மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுப்பதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்த முக்கிய அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

பல வருடங்களாக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். உணவு பரிசோதகர்கள் கூட பாதுகாப்பு கடமைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 116 பாதுகாப்பு அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு கடமைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உரிய தெளிவுபடுத்தல்களை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.

பாதுகாப்பு அதிகாரிகள் பதவி விலக்கப்பட்டமையின் பின்னணியில் ஏதேனும் சூழ்ச்சி இருக்கின்றதா? என்பது சந்தேகம் எழுவதாக சட்டத்தரணி மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார்.