வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இரண்டு மாத சம்பளத்தை முற்பணமாக வழங்குமாறு தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தால் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தபால் திணைக்கள உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் யூ. எல். எம். பைசரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட கடும் மழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக அதிகளவான அரசாங்க உத்தியோகத்தர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். அரசாங்க ஊழியர்கள் என்ற காரணத்தால் அரசாங்கத்தினாலோ அல்லது தனியார் தொண்டு நிறுவனங்களினாலோ வழங்கப்படுகின்ற எந்தவிதமான உதவிகளும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இதனால், பொருளாதார ரீதியாகவும் வாழ்வாதார ரீதியாகவும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இரண்டு மாத அடிப்படைச் சம்பளத்தை முற்பணமாக வழங்குமாறும் அவற்றினை வட்டி இல்லாமல் 24 மாதங்களில் மீளப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.