முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் !


முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 37 ரூபாயாக நிலைநிறுத்துவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மொத்த வியாபாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம்.நைமுதீனுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் இந்த விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானம் முட்டை விலையை நிலைப்படுத்தி நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதேநேரம், சிறப்பு உணவுக் கொள்கைக் குழுவை அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலைகள், தரநிலைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான எதிர்கால முடிவுகளை எடுப்பதற்கு இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளது.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களின் தற்போதைய விலை குறித்த தகவல் சேகரிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் செயலாளர் நைமுதீன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சில அத்தியாவசிய உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தினூடாக அனுமதிக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறையால் அரசுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் கலந்துரையாடலின் போது நிர்ணயிக்கப்பட்ட விலையில் இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இணங்கியுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கை உணவுப் பொருட்களின் விலைகளை ஒழுங்குபடுத்தவும், நியாயமான வர்த்தக நடைமுறைகளை உறுதிப்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.