ஜனாதிபதி தொடர்பில் பொய்யான தகவலை வௌியிட்ட நபரை தேடி விசாரணை !



கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி தொடர்பில் இணையத்தில் பொய்யான செய்தியை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஏற்பட்ட நோய் நிலைமை தொடர்பில் இணையத்தில் பொய்யான செய்தியை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டத்தரணி சுனில் வட்டகல செய்த முறைப்பாட்டின் படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்தது.

சுபாஷ் என்ற நபரின் கணக்கின் ஊடாக இந்த போலியான தகவல் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுனில் வட்டகல தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.