தாழமுக்கத்தின் தற்போதைய நிலை !



தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் நில நடுக்கோட்டு இந்திய பெருங்கடலின் கிழக்காகவும் காணப்பட்ட தாழமுக்கமானது (Depression) கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 10km/h வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தற்போது தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.



இது தற்போது, 

பொத்துவில் பிரதேசத்தில் இருந்து தென்கிழக்காக 150km தூரத்திலும்
கல்முனையில் இருந்து தென்கிழக்காக 200km தூரத்திலும்
மட்டக்களப்பில் இருந்து தெற்கு-தென்கிழக்காக 230km தூரத்திலும்,
திருகோணமலையிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 340km தூரத்திலும்
முல்லைதீவிலிருந்து தென்கிழக்காக 430km தூரத்திலும்,
யாழ்ப்பாணத்திலிருந்து தென்கிழக்காக 510km தூரத்திலும்,
நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு-தென்கிழக்காக 630km தூரத்திலும்,
புதுச்சேரியிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 750km தூரத்திலும்,
சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 830km
தூரத்திலும் தற்போது (26.11.2024 - 05.30am) காணப்படுகின்றது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த வரும் 12 மணித்தியாலத்தில் ஆழ்ந்த தாழமுக்கமாக (Deep Depression) மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் பின்னர் இது அடுத்த வரும் 02 நாட்களில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் கரையோர பிரதேசத்திற்கு அண்மையாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த தாழமுக்கத்தின் காரணத்தினால் இலங்கையின் அனேகமான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன்,

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணத்தின் சில பகுதிகளில் சற்று பலமான காற்றுடன், கனத்த மழை பெய்யும் என இன்று காலை 05.30 மணிக்கு இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மணித்தியாலத்திற்கு 40km - 50km வேகத்தில் காற்று வீசலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் பிராந்தியத்தை பொறுத்தவரையில், இலங்கைதீவைச் சுற்றியுள்ள கடல் பிராந்தியத்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன், இக்கடல் பிராந்தியத்தில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40km/h முதல் 50km/h வரையான வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்து காற்று வீசும்.

சில சந்தர்ப்பங்களில் இந்த காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60km/h - 70km/h வரை அதிகரித்து வீசுவதுடன், இக்கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

எனவே மீனவர் சமூகம் மற்றும் கடல் சார்ந்த தொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரும் வரை துணிகர செயல் எதிலும் ஈடுபட வேண்டாம் என இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தினால் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள்.


க.சூரிய குமாரன், முன்னாள் சிரேஷ்ட வானிலை அதிகாரி.