அம்பாறை, காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவர் உட்பட நால்வர் நேற்று (28) கைது செய்யப்பட்டனர்.
கைதான சந்தேக நபர்களை, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்ற பின்னர் சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிவான் எம்.ரி சபீர் அகமட் முன்னிலையிலும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது மதரசாவின் அதிபர், ஆசிரியரை எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய இரு உதவியாளர்களையும் தலா 1 இலட்சம் ரூபா வீதம் சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (26) நிந்தவூர் பகுதியில் அமைந்துள்ள மதரசா ஒன்றில் கல்வி கற்றி, மாணவர்கள் சம்மாந்துறை பகுதியில் அமைந்துள்ள அவர்களது வீடுகளுக்கு செல்ல பஸ் இல்லாத காரணத்தினால், உழவு இயந்திரத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது, மாணவர்கள் பயணம் செய்யவுள்ள குறித்த வீதியானது மோசமான வானிலையால் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், ஊழவு இயந்திரத்தில் மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டாம் என்றும் சோதனைச் சாவடி பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரும் அறிவுறுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், 11 மாணவர்களுடன் பயணித்த உழவு இயந்திரம் சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் நீரோட்டத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதன்போது ஐந்து மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், மேலும் 06 மாணவர்கள் காணாமல் போயிருந்தனர்.
12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 6 மாணவர்களே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.
காணாமல் போன மாணவர்களில் இதுவரை 05 பேர் உயிரிழந்த நிலையில் சடலங்காக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு மாணவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது தவிர உழவு இயந்திர சாரதி, மற்றுமொருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
காணாமல் போயுள்ள எஞ்சியுள்ள மாணவரை தேடும் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.