தென் மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது தற்போது திருகோணமலையிலிருந்து வடகிழக்காக 100km தூரத்தில் காணப்படுகின்றது.
இது வடமேற்கு திசையில் மிக மெதுவாக இலங்கையின் கிழக்கு கரையோரத்தை அண்மித்ததாக நகர்ந்து கொண்டு செல்கின்றது.
இது இன்றைய தினம் சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் தாக்கத்தினால் இலங்கையின் அதிகமான பிரதேசங்கள் மேகமூட்டமாக காணப்படுவதுடன், வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் இந்தப் பிரதேசங்களில் 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சிக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவு செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமத்திய, வடமேற்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும் மாத்தளை, கேகாலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100mm மழை வீழ்ச்சிக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவு செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 60km/h - 70km/h வேகத்தில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன், ஏனைய பிரதேசங்களில் 40km/h - 50km/h வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இந்த இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்றும் பலமானதாக வீசும். எனவே பொதுமக்கள் இந்த இடி மின்னல் தாக்கத்திலிருந்து ஏற்படும் சேதங்களை குறைத்துக் கொள்ளும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கடல் பிராந்தியத்தை பொறுத்தவரையில் இலங்கை தீவை சுற்றி உள்ள கடல் பிராந்தியங்கள் பலவற்றிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது 40km/h - 50km/h வரையான வேகத்தில் வட கிழக்கு திசையில் இருந்து காற்று வீசும்.
இந்த காற்றின் வேகமானது சில சந்தர்ப்பங்களில் 60km/h - 70km/h வரை அதிகரித்து வீச கூடும்.
இலங்கை தீவை சுற்றியுள்ள கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படுவதுடன்,
மட்டக்களப்பு முதல் திருகோணமலை ஊடான காங்கேச்துறை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5m தொடக்கம் 3m வரை உயரக்கூடும்.
எனவே மீனவர் சமூகம் மற்றும் கடல் சார்ந்த தொழிலாளர்கள் தமது கடல் நடவடிக்கையின் போதும் துணிகர செயல் எதிலும் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.