பொருத்தமான எதிர்க்கட்சியை உருவாக்கினால், அரசாங்கத்தை விட அதிகமான பணிகளைச் செய்ய முடியும் - திலித் ஜயவீர !


பொருத்தமான எதிர்க்கட்சியை உருவாக்கினால், அரசாங்கத்தை விட அதிகமான பணிகளைச் செய்ய முடியும் என சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

துணிச்சலான எதிர்க்கட்சியானது எப்பொழுதும் எதிர்க்கட்சியில் இருக்க வேண்டிய அவசியமில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

திலித் ஜயவீர தலைமையில், 'பதக்கம்' சின்னத்தின் கீழ் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விசேட கூட்டம் இன்று (12) வஸ்கடுவ ஹோட்டலில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், "நாங்கள் தேசியம் பற்றி பேசுகிறோம். இனவாதம் அல்ல. இலங்கையின் தேசியம் சிங்கள பௌத்த நாகரீகத்தை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்ல பலர் பயப்படுகிறார்கள். இதைச் சொன்னால் மக்கள் கோபப்படுவார்கள் என்று நினைக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் இனவாதம் என்ற ஒன்றை தேர்ந்தெடுத்து அரசியல் செய்வதுதான் பிரச்சினை. இது தெற்கில் செய்யப்படுகிறது. வடக்கிலும் செய்யப்படுகிறது. நாங்கள் அதற்கு எதிரானவர்கள்.

நாட்டில் உள்ள அனைவரையும் தொழில் முனைவோர் மனப்பான்மைக்கு கொண்டு வந்தால் இந்த நாட்டை பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முடியும்

வெள்ளத்துக்குப் பிறகு எப்படிப் போவது என்று பார்க்கிறார்கள். இப்படிச் செய்ய முடியாது. ஒரு மூலோபாய திட்டம் இருக்க வேண்டும். அப்படித்தான் நாடுகள் வளர்ச்சி அடைந்துள்ளன.

இப்போது நாம் எதிர்க்கட்சிக்கு செல்ல வேண்டும். அரசியலை மாற்ற வந்தோம். ஒரு உகந்த எதிர்க்கட்சி உருவானால், ஒரு அரசாங்கம் அதிக வேலைகளைச் செய்ய முடியும். ஒரு நல்ல எதிர்க்கட்சி எப்போதும் எதிர்க்கட்சியில் இருக்க வேண்டும் என்பதில்லை. நாங்கள் துணிச்சலான எதிர்க்கட்சியாக இருப்போம். வழக்கு இருந்தால்.., கட்டிலுக்கு கீழ் சரக்கு இருந்தால்.., மோசடி கணக்குகள் இருந்தால் அச்சமூட்டும் எதிர்க்கட்சியாக மாறுவோம்" என்றார்.

ஒரு வருட குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சியை எட்டிய சர்வஜன அதிகார கூட்டணியானது, இம்முறை 22 தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுவதோடு, அதன் அனைத்து வேட்பாளர்களும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பொறுப்பான மற்றும் நியாயமான தேர்தலுக்கான பிரசார நடவடிக்கையைத் தொடங்குவது குறித்து அனைத்து வேட்பாளர்களுக்கும் விளக்கமளிக்கும் நோக்கத்துடன் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தாண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் சர்வஜன அதிகாரத்தின் சின்னமான 'பதக்கம்' அணிவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.