பாராளுமன்ற உறுப்பினர்களின், அமைச்சர்களின் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்கு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் தற்போதுள்ள கட்டளைச் சட்டங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது குறித்த அமைச்சரவை தீர்மானம் கீழே...
02. பாராளுமன்ற உறுப்பினர்களின், அமைச்சர்களின் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளில் மீள் கவனம் செலுத்துதல்
மக்களுடைய வாக்குகளால் நியமிக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமைச்சர்களுக்கு மற்றும் முன்னாள் ஜனாதிபதிமாருக்கு சம்பளம், கொடுப்பனவு, ஓய்வூதியம், உத்தியோகபூர்வ இல்லம், வாகனங்கள், பணியாட்குழாம், அலுவலக உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் போன்ற பல்வேறு உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை வழங்குவதற்காக மக்களுடைய வரிப்பணத்திலிருந்து அரசு குறிப்பிடத்தக்களவு செலவை வருடாந்தம் மேற்கொள்கின்றது.
தற்போதுள்ள அரச நிதியில் மேற்படி அதிகளவான செலவுகளைக் குறைக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.அதற்கமைய, அதுதொடர்பான விடயங்களை ஆராய்ந்து திறைசேரிக்கு தேவையற்ற செலவுச்
சுமைகளை ஏற்படுத்துகின்றதும் மற்றும் தர்க்க ரீதியற்ற உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும்சிறப்புரிமைகளை தர்க்க ரீதியான முறையில் மட்டுப்படுத்துவதற்கு அல்லது மாற்று முறைகளை அறிமுகப்படுத்துவதற்குப் பொருத்தமான விதந்துரைகளுடன் கூடிய விபரமான அறிக்கையை இரண்டு (2) மாதங்களில் சமர்ப்பிப்பதற்காக கீழ்காணும் கட்டமைப்புடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக சட்டம், பொதுநிருவாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் தொழில்
அமைச்சராக பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளது.
• திரு. கே.ரீ. சித்திரசிறி அவர்கள் - (தலைவர்)
ஓய்வுநிலை உயர்நீதிமன்ற நீதியரசர்
• திரு.டி. திசாநாயக்க அவர்கள்
ஓய்வுநிலை அமைச்சின் செயலாளர்
• திருமதி ஜயந்தா சீ.டீ. புளுமுல்ல
ஓய்வுநிலை மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர்