போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த முன்னாள் சிறைச்சாலை அதிகாரி கைது !


உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை ருவன்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர், மஹர சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரியாக பணியாற்றி 2019 ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறியவராவார்.

அதன் பின்னர் குறித்த நபர் தனது உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இம்புலான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 5,500 மில்லிகிராம் ஹெரோயின், 600 மில்லி கிராம் ஐஸ், கஞ்சா மற்றும் பல எடை கருவிகள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இந்தச் சோதனையில் போதைப்பொருள் வாங்க வந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.