திருமண நிகழ்வில் தகராறு; ஒருவர் அடித்துக்கொலை !


அங்குலானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் வளாகத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அங்குலானை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. அங்குலானை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த திருமண நிகழ்வின் போது கொலை செய்யப்பட்டவருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட நபரை அடித்துக் காயப்படுத்தியுள்ளார். காயமடைந்தவர் லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குலானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.