முன்னாள் தமிழ் எம்.பியின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட அரசாங்க வாகனம் !


அரச வாகனமொன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நுவரெலியாவில் மீட்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவத்தின் சகோதரர் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்படும் வாகனங்கள், ஏதேனும் ஒரு இடத்தில் மோசடியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ மறைத்துவைக்கப்பட்டு பாழடைந்த நிலையில் விடப்பட்டால் அது தொடர்பாக தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட நிலையில், இந்த வாகனம் மீட்கப்பட்டு நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை பிணவறைக்கருகிலும் இரு வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் ஒரு வாகனம் அரச இலச்சினை பொருத்தப்பட்டிருந்ததாகவும் அந்த வாகனம் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, பெலியத்த – புவாக்தண்டாவ, வீரசிங்க மாவத்தையிலுள்ள வீடொன்றுக்கருகில், அரசாங்கத்துக்கு சொந்தமான வாகனமொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தங்காலை குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தை தங்காலை உள்ளூராட்சி சபையின் முன்னாள் உப தலைவர் ஒருவர் பயன்படுத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.