மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இன்றைய தினம் (30) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுல் அத்துமீறி நுழைந்தமை மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் முறைப்பாட்டிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் இரண்டு சரீர பிணையில் குறித்த வைத்தியர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவின் வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் (30) மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் அவர் மன்றில் முன்னிலையாகவில்லை.
மேலும் இரண்டு பிணைதாரர்களில் ஒருவர் மாத்திரமே மன்றில் முன்னிலையாகி இருந்தார்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், வைத்தியர் அர்ச்சுனா மற்றும் பிணையாளி ஆகிய இருவரையும் கைது செய்து மன்றில் முன்னிலையாக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.