சர்வஜன அதிகார கட்சியானது அதிகளவிலான ஆசனங்களைப் பெற்று பலமான எதிர்க்கட்சியாக செயற்படும் !


எதிர்வரும் பொதுத் தேர்தலில் சர்வஜன அதிகார கட்சியானது, நாடு முழுவதும் அதிகளவிலான ஆசனங்களைப் பெற்று ஒரு பலமான எதிர்க்கட்சியாக செயற்பட்டு, நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவோம் எனவும் அக்கட்சியின் புத்தளம் மாவட்ட தலைமை வேட்பாளரான சிலாபம் நகர சபையின் முன்னாள் பிரதித் தலைவரும், சட்டத்தரணியுமான சாதிக்குள் அமீன் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் பதக்கம் சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் சர்வஜன அதிகாரம் கட்சியின் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த நாட்டு மக்கள் நல்லதொரு மாற்றத்தை விரும்புகிறார்கள். மக்கள் விரும்பிய ஆட்சியை எந்த ஆட்சியாளர்களும் பெற்றுக்கொடுக்கவில்லை. ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சியை வழிநடத்தக்கூடிய ஒரு பலமான எதிர்க்கட்சி இருக்க வேண்டும். ஆனால், கடந்த காலங்களில் இந்த நாட்டில் அப்படியொரு பலமான எதிர்க்கட்சி இருக்கவில்லை.

இந்த நாட்டில் பலமான எதிர்க்கட்சி இருந்திருந்தால் இந்த நாடு இப்படியான மோசமான நிலைக்கு சென்றிருக்காது. எனவேதான் புதிய பாராளுமன்றத்தில் ஒரு பலமான எதிர்க்கட்சியாக செயற்படுவததற்கு இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் எமது கட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

எமது சர்வஜன அதிகாரத்தின் தலைவரான திலித் ஜயவீர, மூவின மக்கள் மீதும் அன்பு கொண்டவர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் கணிசமான அளவு வாக்குகளைப் பெற்றிருந்தார். எமது கட்சி புதிய கட்சியாக இருந்தாலும் மக்கள் எமது கட்சியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

எமது கட்சியின் தலைவரான திலித் ஜயவீரவிடம் இனவாதம் இல்லை. அவரது கைகள் சுத்தமானவை. சொந்த முயற்சியதல்தான் அவர் இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறார். அவர் நிச்சயமாக நாட்டு மக்களுக்கு நல்லதொரு தலைமைத்துவத்தை, எதிர்காலத்தை அவர் நிச்சயமாக பெற்றுக்கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.

எமது கட்சி அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிடுகிறது. எனவே, சர்வஜன அதிகாரத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள். எமக்கு எதிர்க்கட்சிக்கு உரிய அந்தஸ்தைப் பெற்றுத் தாருங்கள். அதுவே, மக்கள் விரும்பும் ஆட்சிக்கு அடித்தளமாக அமையும்.