ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான "கனேமுல்ல சஞ்சீவ" மற்றும் "வெலே சுதா" ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையின் அறைகளுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் பல தொலைபேசி பாகங்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புஸ்ஸ சிறைச்சாலை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (12) புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலையின் ஏ பிரிவில் உள்ள விசேட பிரிவின் பல அறைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
அதற்கமைய, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கனேமுல்ல சஞ்சீவ' அடைக்கப்பட்டுள்ள அறைக்குப் பின்னால் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
சமந்த குமார எனப்படும் 'வெலே சுதா' தடுத்து வைக்கப்பட்டுள்ள அறைக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல கையடக்க தொலைபேசி உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் உபகரணங்கள் மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.