நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தாம் தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் திசைகாட்டி மற்றும் எரிவாயு சிலிண்டருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக தாம் அந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரை அவருக்கு உரிய இடத்தில் மக்கள் வைத்துள்ளார்கள் என்று நான் நம்புகிறேன். அது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் அநுரகுமார திஸாநாயக்கவுடன் பொதுத் தேர்தல் குறித்து சுமார் 10 நிமிடங்கள் மிகக் குறுகிய கலந்துரையாடலை மேற்கொண்டேன்.
அவர் தெரிவித்த கருத்து என்னவெனில், ஜனாதிபதி தேர்தலில் தம்முடன் இல்லாதவர்களுக்கு வேட்புமனு வழங்குவதற்கு தான் எதிரானவன் என்று தெரிவித்தார்.
அடுத்ததாக முன்னாள் பிரதமருடன் கலந்துரையாடினேன். முன்னாள் அமைச்சர்களுடனும் கலந்துரையாடினேன். சிலிண்டர் சின்னத்தில் உள்ளவர்களுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டேன்.
எனினும் உடன்பாடு எட்டப்படவில்லை. அதற்கமைய, இந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளேன் என்றார்.