இணையவழி மோசடிகள், போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு !




இவ்வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இணையவழி மோசடிகள் மற்றும் போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 8 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) தெரிவித்துள்ளது.

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் பொறியியலாளர் சாருக தமுனுபொல இது தொடர்பில் தெரிவிக்கையில்,

சமூக ஊடகங்களில் உள்ள போலிக் கணக்குகள் மூலம் அதிகளவான இணையவழி மோசடிகள் இடம்பெறுகின்றன.

இணையவழி மோசடிகள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற 8 ஆயிரம் முறைப்பாடுகளில் 200 முறைப்பாடுகள் ஒ.டி.பி. இலக்கங்களுடன் தொடர்புடையவை ஆகும்.

தங்களது ஒ.டி.பி. இலக்கங்களை பல்வேறு நபர்களுக்குப் பகிர்வதாலும் அதிகளவான இணையவழி மோசடிகள் இடம்பெறுகின்றன.

இதனால், பொதுமக்கள் தங்களது ஒ.டி.பி. இலக்கங்களை எந்த சந்தர்ப்பத்திலும் வேறு நபர்களுக்குப் பகிர வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.