அம்பாறையில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி !


அம்பாறை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 21 அரசியல் கட்சிகளினதும் 43 சுயேட்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் ஏற்றுகொள்ளப்பட்டது என மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.

எதிர்வரும் 2024 ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று (11) மாலை ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் 2024 ஆண்டிற்கான பொதுத்தேர்தல் தேர்தல் ஆணைக்குழுவினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பிரகாரம் 2024.10.04 தொடக்கம் 2024.10.11 வரையான காலப்பகுதியில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 07 ஆசன தெரிவிற்காக அங்கீகரிக்கப்பட்ட 22 அரசியல் கட்சிகளினதும் சுயேட்சைக்குழுக்கள் 50 இனதும் நியமனப்பத்திரங்கள் கிடைக்கப் பெற்றிருந்தன.

அத்துடன் நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்த அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியும் 07 சுயேட்சைக்குழுக்களையும் தேர்தல் சட்ட திட்டங்களுக்கமைய பல்வேறு குறைபாடுகளை கருத்திற் கொண்டு நிராகரித்துள்ளோம். இதன்படி தற்போது அங்கீகரிக்கப்பட்ட 21 அரசியல் கட்சிகளினதும் சுயேட்சைக்குழுக்கள் 43 இனது நியமனப்பத்திரங்களை ஏற்றுக் கொண்டுள்ளோம். மொத்தமாக 64 அரசியல் கட்சி உட்பட சுயேட்சைக்குழுக்கள் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக போட்டியிடுகின்றன.

2024 ஆண்டு பொதுத்தேர்தல் அறிவித்த பின்னர் அம்பாறை மாவட்டத்தில் வன்முறையற்றறும் அமைதியானதுமான தேர்தல் செயற்பாடுகள் நடைபெற்று கொண்டு வருகின்றது. பெரியளவிலான வன்முறைகள் எவையும் இடம்பெறவில்லை.

எனினும் சிறு சம்பவங்கள் தேர்தல் கண்காணிப்பு ஊடாக கிடைக்கப்பெற்றிருந்தன. அவற்றுக்கான தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. வன்முறையற்ற நீதியான தேர்தல் ஒன்றினை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவும் தெரிவத்தாட்சி அலுவலருமான நானும் பொதுமக்களின் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்தார்.