விபசாரம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஐந்து பெண்களுக்கு ரூ.500 அபராதம் : நுவரெலியா நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு !



விபசாரம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஐந்து பெண்களுக்கு தலா 100 ரூபாய் என்றடிப்படையில், 500 ரூபாய் அபராதத்தை நுவரெலியா நீதவான் பிரபுத்திகா லங்காங்கனி திங்கட்கிழமை (21) விதித்துள்ளார்.

நுவரெலியாவில் மசாஜ் நிலையம் நடத்தும் போர்வையில் பெண்களை பணத்திற்காக விற்பனை செய்யும் வியாபாரத்தை நடத்தி வந்த மசாஜ் நிலையத்தின் முகாமையாளர், கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் ஐந்து பெண்கள் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

முகாமையாளருக்கு 1,50,000 ரூபாயும், கட்டிட உரிமையாளருக்கு 200,000 ரூபா ய் தண்ட பணம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

நுவரெலியாவில் மசாஜ் சென்டர் என்ற போர்வையில் பெண்களை பணத்திற்கு விற்பனை செய்வதாக நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் சுற்றிவளைப்பு நடத்தி அதன் முகாமையாளர் , உரிமையாளர் மற்றும் ஐந்து பெண்கள் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி திங்கட்கிழமை (21) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்கள் ஐவரும் 40-50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள், பொலன்னறுவை மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டது.