அரசியல் குழுவொன்று வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர் மத்தியில் தங்கள் அணிக்கு மக்கள் அலை இருப்பதாக காட்ட மேற்கொள்ளும் முயற்சிகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று முன்னணி சந்தைப்படுத்தல் நிபுணரான கலாநிதி ரங்க ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், வெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் ஆதரவு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எமது அபேட்சகருக்கு தான் கிடைக்கப்பெறும். அவர்கள் இத்தேர்தலில் எமது அபேட்சகருக்கு வாக்களிக்க தாயகம் வருவர் என்று காட்ட முயற்சி செய்கின்றனர். இதன் நிமித்தம் குழு சமூக ஊடகங்கள் ஊடாகப் பயன்படுத்தி பொய்யான தகவல்களைப் பரப்பி அற்ப அரசியல் இலாபம் தேட எதிர்பாரக்கின்றனர்.
ஆனால் நாட்டின் உண்மையான நிலவரம் அவ்வாறு இல்லை என்பதை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர் புரிந்து கொள்ள வேண்டும். நாடு கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகி தற்போது தான் மீட்சி பெற்று இருக்கின்றது. அந்த மீட்சிப்பாதையில் பொருளாதாரம் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும். அதில் இடையூறுகளை ஏற்படுத்த இடமளிக்கலாகாது. எமது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பெரிதும் சேவை ஆற்றிவருகின்றனர். இருப்பினும் நாடு முகம் கொடுத்த கடந்த பொருளாதார வீழ்ச்சியின் போது வெளிநாடுகளிலுள்ள இலங்கையரிடம் நாட்டுக்கு அந்நியச் செலாவணியை அனுப்ப வேண்டாம் என்று இதே குழுவினர் தான் கோரினர். ஆனால் நாட்டுக்கும் மக்களுக்கும் தீங்கிழைக்கும் இத்தகைய கோரிக்கையை புலம்பெயர் தொழிலாளர்கள் நிராகரித்தனர். அவர்கள் அனுப்பி வைத்த அந்நியச் செலாவணி ஆறுதலாக அமைந்தது.
இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர் அளிக்கும் பங்களிப்பு முக்கியத்துவம் மிக்கதாக விளங்கி வருகிறது. உதாரணமாக, 2021 இல் சுமார் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 3.14 பில்லியன் அமெரிக்க ெடாலர்களாகக் காணப்படுகிறது. அதிலும் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 566.8 மில்லியன் அமெரிக்க ெடாடலர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பாரிய பங்களிப்பை நல்கிவரும் வெளிநாட்டு தொழிலாளர்களை அற்ப அரசியலுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.