பாடசாலை மாணவனின் வீட்டிலிருந்து தோட்டாக்கள் கண்டுபிடிப்பு !


அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவனின் வீட்டிலிருந்து தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் T-56 ரக தோட்டாக்களை வைத்திருந்ததை அவதானித்த ஆசிரியர் ஒருவர் இது தொடர்பில் பாடசாலை அதிபருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, பாடசாலை அதிபர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பின்னர், பொலிஸ் குழு ஒன்று இந்த மாணவனின் வீட்டிற்குச் சென்று சோதனையிட்ட போது வீட்டில் உள்ள அலுமாரியில் இருந்து T-56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 17 தோட்டாக்கள், கைத்துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 10 தோட்டாக்கள் மற்றும் ரிவோல்வர் ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 01 தோட்டா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, இந்த வீட்டில் மாணவனின் தாய் மாத்திரமே இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.