காலநிலையில் திடீர் மாற்றம் – மக்களுக்கு எச்சரிக்கை !


மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், மறுஅறிவிப்பு வரும் வரை வங்கக்கடலின் ஆழ்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கடல் மற்றும் மீனவ மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேற்படி திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கக்கடலை சுற்றியுள்ள கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 2 நாட்களில் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாகவும், பின் காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது மணிக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.

அத்துடன், காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.