இன்று விசேட வாக்குச்சீட்டு விநியோக சேவை !



ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) காலை 09 மணி முதல் மாலை 06 மணி வரை இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை வரை வாக்குச்சீட்டு விநியோகிக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை (6) நிறைவடைந்தது.

4, 5, 6 ஆகிய திகதிகளில் தபால்மூலம் வாக்களிக்காதவர்கள் எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் தமது சேவை பிரதேசத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வாக்களிக்க முடியும். தபால் மூல வாக்களிப்புக்கு இம்முறை 7,12,319 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு விநியோகத்துக்காக இன்றைய தினம் விசேட தபால் சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று காலை முதல் மாலை வரை விசேட தபால் சேவை ஊடாக வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படும்.

நாட்டின் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதியை தெரிவுசெய்யும் 9ஆவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் 13 ஆயிரம் வாக்கெடுப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முறை 1 கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்கவுள்ளனர்.