தேசபந்து தென்னகோனுக்கு எதிரான இடைக்கால உத்தரவு !


தேசபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றுவதைத் தடைசெய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீக்கக்கோரி பெல்லன்வில ரஜமஹா விஹாராதிபதி கலாநிதி பெல்லன்வில தர்மரத்ன தேரர் உள்ளிட்ட மூன்று தேரர்களினால் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெல்லன்வில ரஜமஹா விஹாராதிபதி கலாநிதி பெல்லன்வில தர்மரத்ன தேரர், கொள்ளுப்பிட்டி ராகுல தேரர் மற்றும் பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றுவதை நிறுத்துமாறு கோரி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்டோரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த ஜூலை மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், தேசபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றுவதை இடைநிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பித்தமை இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் காரணமாக, எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவுகளை வழங்க முடியாதிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள இடைக்கால மனுதாரர்கள் தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியபோது ‘யுக்திய’ என்ற பெயரில் போதைப்பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் செயற்றிறன்மிக்க பொலிஸ் மா அதிபர் எனவும் இந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.