ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்க பொதுநலவாய அமைப்பின் கண்காணிப்புக்குழு 15 ஆம் திகதி நாட்டுக்கு வருகை !



இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக சிஷேல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டெனி ஃபோர் தலைமையிலான 13 பேர் அடங்கிய பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக்குழு எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கண்காணிப்புப்பணிகளை முன்னெடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுத்துள்ளது.

அதற்கமைய ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் இரண்டு குழுக்கள் கடந்த இரு வாரங்களில் நாட்டை வந்தடைந்ததுடன், அவை நாடளாவிய ரீதியில் தேர்தல் கண்காணிப்புப்பணிகளை ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில், பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக்குழுவொன்றும் எதிர்வரும் 15 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவுள்ளது.