ஐக்கிய மக்கள் சக்தி 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெறும் : சஜித் பிரேமதாச !



புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தி 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெறும். ரணில் அநுர ஜோடி கீழ் மட்டத்திலே இருக்கிறது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் அனைத்தையும் புத்தபெருமானின் ஆசீர்வாதங்கள் பாதுகாக்கும் என்பதோடு நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம். இந்த வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மொனராகலையில் ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
வன்முறை என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையல்ல. மாற்றுக் கொள்கையோடு இருக்கின்ற எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நாட்டை கட்டி எழுப்புகின்ற பயணத்தில் அனைவரையும் பங்காளர்களாக இணைத்துக் கொள்வோம். மத சுதந்திரத்தை கௌரவப்படுத்துவதோடு, பௌத்தம் இந்து, இஸ்லாம், கத்தோலிக்க ஆகிய மதங்களை பின்பற்றுவதற்கு எவருக்கும் உரிமை இருப்பதனால், அந்த உரிமையை பாதுகாப்போம்.

அதேபோன்று நாட்டுக்குள் தலைதூக்கி இருக்கும் போதைப்பொருள் விநியோகத்தை அதிகாரத்திற்கு வந்து ஆறு மாதங்களுக்குள் நிறுத்துவதற்கு தேவையான அதிகபட்ச தீர்மானங்களை எடுப்போம். போதைப் பொருள் மாபியாவை நிறைவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். இடம்பெற இருக்கும் இந்த தேர்தலில் எமது வெற்றி உறுதியாகும்.

இந்த வெற்றியை பெரு வெற்றியாக்கிக்கொள்வதற்கு, மக்கள் விடுதலை முன்னணி, பொது ஜன முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைவரும் இறுதித் தருணத்தில் உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் தொலைபேசிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

புலனாய்வு துறையின் தகவலின் பிரகாரம் இந்த தேர்தலில் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் நாம் வெற்றி பெறுவோம். புனித தலதா மாளிகையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை முதன் முதலில் சமர்ப்பித்து ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்ட பின்னரே நாம் தேர்தல் பணிகளை ஆரம்பித்தோம். தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் அனைத்தையும் புத்தபெருமானின் ஆசீர்வாதங்கள் பாதுகாக்கும்.

எம்மிடம் பொய், திருட்டு, மோசடி என்பன இல்லை. அரசியல் டீல்கள் இல்லை. பாதிக்கப்பட்டிருக்கின்ற 220 இலட்சம் மக்களை மீட்டெடுப்பதற்கான சமூக ஒப்பந்தம் மாத்திரமே எம்மிடம் இருக்கிறது. வரி சுமையை குறைத்து முதலீடுகளை அதிகரித்து ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்போம். நாட்டை சீரழித்த திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்தி நாட்டில் இருந்து திருடிச் சென்ற அனைத்து சொத்துக்களையும் வளங்களையும் மீண்டும் நாட்டுக்கு பெற்றுக் கொள்வோம்.

விவசாயிகளுக்கு 50 கிலாே கிராம் உரத்தை 5ஆயிரம் ரூபாவுக்கு நிவாரண அடிப்படையில் வழங்குவோம். வெல்லஸ்ஸ பகுதியில் இல்லாது போன பாரம்பரியமாக விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலங்களை மீண்டும் பெற்றுக் கொடுப்போம். வறுமையை ஒழிப்பதற்காக ஐந்து திட்டங்களின் கீழ் மாதம் ஒன்றுக்கு இருபதாயிரம் ரூபா வீதம் 24 மாதங்களுக்கு நிவாரணங்களை வழங்குவோம். நாம் வாக்குறுதியளித்தால் அது வார்த்தைகளோடு மாத்திரம் மட்டுப்படாமல் அதனை நிதர்சனப்படுத்துவோம்.

மேலும் இந்த அரசாங்கம் கதிர்காம புனித பூமியில் திறந்து வைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை மூடுவோம். இந்த அரசாங்கம் வெட்கமில்லாமல் புனித புமியிலும் மதுபான சாலைகளை திறக்கிறது. எனவே ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்தவுடன் இந்த மதுபான மூடுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.