இந்த நாட்டுக்கு எதிர்வரும் 05 வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் அவசியமானவரென்பதை நாட்டு மக்கள் சிந்தித்து தீர்மானம் எடுப்பது முக்கியமென முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். பி திசாநாயக்க தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசவோ, அநுரகுமார திசாநாயக்கவோ இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்றப்போவதில்லை. மக்களுக்கும் அவர்களால் எவ்வுத சிறந்த எதிர்காலமும் கிடைக்கப் போவதில்லை எனவும், அவர்கள் வழங்கியுள்ள வாக்குறுதிகள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். சஜித் பிரேமதாச நெருக்கடியான காலத்தில் நாட்டையும் மக்களையும் பொறுப்பேற்கத் தவறியவர். அதேபோன்று ஜே.வி.பியின் ஆரம்பமே திருட்டு, கொள்ளை, படுகொலை, வன்முறை, கப்பம் பெறுவதில் தான் ஆரம்பித்தது. இன்றும் அவர்கள் மாறவில்லை என்பது ஆர்ப்பாட்டக் காலத்தில் தெளிவாக தெரிந்ததாக அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியில் தேர்தலில் போட்டியிட்டவர்களை படுகொலை செய்தமை, பொலிஸார் மற்றும் படையினரை படுகொலை செய்தமை, அரசாங்க பஸ்களுக்கு தீ வைத்தமை, வேறு கட்சிகளில் தேர்தலில் நின்றால் அவர்களுக்கு தண்டனை வழங்குகின்றமை, திருட்டுக்கள், கொள்ளைகள் என அவர்களின் ஆரம்பமே மிகவும் மோசமாக இருந்ததையும் அது இன்னும் அவர்களிடமிருந்து மாறவில்லை எனவும் அவர் தெரிவித்தார். ‘இயலும் ஸ்ரீலங்கா’ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று பெல்மதுளை நகரில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட அக் கூட்டத்தில் உரையாற்றும் போது இதனை தெரிவித்த அவர், மேலும் தெரிவிக்கையில,மிக நெருக்கடியான நிலையில் காணப்பட்ட நாட்டை குறுகிய காலத்தில் பாதுகாத்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே. எதிர்காலத்திலும் அவருக்கு உதவி ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக சர்வதேச நாடுகள் காத்திருக்கின்றன. அந்த வகையில், எதிர்வரும் 05 வருடங்களுக்கு நாட்டை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் வேலைத் திட்டங்களை முழுமையாக முன்னெடுப்பதற்கு அவரால் மட்டுமே முடியும்.