சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக சென்ற இரு பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் !


வெல்லவாய, குடா ஓயா பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக சென்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகளை அங்கிருந்த நபர்கள் சிலர் தாக்கி காயப்படுத்தியுள்ளதாகக் குடா ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

குடா ஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளே காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

வெல்லவாய, குடா ஓயா பகுதியில் உள்ள வீடொன்றில் சூதாட்டம் நடத்தப்படுவதாகக் குடா ஓயா பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, காயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகளும் குறித்த வீட்டிற்கு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காகச் சென்ற போது அங்கிருந்த நபர்கள் சிலர் இந்த இரு பொலிஸ் அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர்.

பின்னர், காயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகளும் சிகிச்சைக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த வீட்டிலிருந்த நபரொருவரும் பொலிஸ் அதிகாரிகள் தன்னை தாக்கியதாகக் கூறி தணமல்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குடா ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.