விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வட்டியில்லா கடன் !


விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக விவசாய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று(22) ஜனாதிபதி அலுவலகத்தில் கையெழுத்திடப்பட்டது.
முதல் கட்டத்தில், இந்த வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பை வழங்கும் இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன், விவசாய, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்.

இதன்படி எதிர்காலத்தில் மக்கள் வங்கியுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக முன்னோடித் திட்டங்களை நடைமுறைப்படுத்த தெரிவு செய்யப்பட்ட 26 பிரதேச செயலகங்களில் விவசாய நவீனமயமாக்கல் நிலையங்கள் ஊடாக வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த தலா 25 மில்லியன் ரூபா வீதம் 650 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக 10 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய நவீனமயமாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்த 75 பிரதேச செயலகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.பிரதேச செயலகங்களில் விவசாய நவீனமயமாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது, குறித்த வேலைத்திட்ட செலவில் 30% இற்கும் அதிகமான பங்களிப்பை விவசாயத் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகள் வழங்குவதுடன், மீதமுள்ள 70% அரசாங்கத்தின் பங்களிப்பாகவும் உள்ளது.

சுழற்சி முறைக் கடன் திட்டமாக செயல்படுத்தும் வகையில், அரசு வழங்கிய பங்களிப்பை விவசாய நவீனமயமாக்கல் கடன் திட்டத்தின் கீழ் வட்டியில்லாக் கடனாக, இலங்கை, மக்கள் வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகிய மூன்று அரச வங்கிகளில் இருந்து பயனாளிகள் தேர்ந்தெடுக்கும் வங்கி மூலம் திரும்பப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில், பொறிமுறைமையொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதன்படி, இலங்கை வங்கியின் தலைமையகத்தில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளரின் பெயரில் உள்ள கணக்கில் வைப்பு செய்யப்பட்ட நிதியத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கு, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகிய மூன்று வங்கிகளில் பயனாளி தேர்ந்தெடுத்த வங்கியின் மூலம் விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு வட்டியில்லாக் கடனாக இந்தப் பணம் வழங்கப்படுகிறது.

கடன் சலுகைக் காலம் அதிகபட்சம் 06 மாதங்கள் ஆகும். மேலும் கடன் சலுகைக் காலம் உட்பட கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய அதிகபட்ச காலம் 05 வருடங்கள் ஆகும். மேலும், விவசாயிகள் அல்லது விவசாய தொழில்முயற்சியாளர்கள் பெற்றுக்கொள்ளும் கடன் தொகை மற்றும் வேலைத் திட்டத்தின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், கடன் சலுகைக் காலம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் ஆகியவை விவசாய நவீனமயமாக்கல் மையங்களால் தீர்மானிக்கப்படுகின்றன.