ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை 4 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் !


ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒரு சில மணித்தியாலத்துக்குள் நான்கு வேட்பாளர்கள் இன்று (26) வெள்ளிக்கிழமை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிட முதலாவதாக கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொனெல் பெரேரா இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தினார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்தி ரத்ன சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதற்கு இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்டார்.

அனினவ நிவஹால் பெரமுன என்ற கட்சி சார்பில் போட்டியிடுவற்கு ஓசல லக்மால் அனில் ஹேரத் என்பவரும், இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு எஸ்.ஜி.லியனகே என்பவரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் இன்று (26) முதல் எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்துவதற்கு காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் 50,000 ரூபாவும் ,சுயாதீன வேட்பாளர் 75,000 ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.