இளைஞரின் குத வழியாக பாய்ந்து 15 பாகங்களை கிழித்துக் கொண்டு மார்பக பக்கமாக வெளியே வந்த தடி: கல்முனையில் நீண்ட நேர அறுவை சிகிச்சை !


பனை மரத்திலிருந்து கீழே தவறிவிழுந்த போது பாடசாலை மாணவனின் வயிற்றில் குத்திய இரண்டடி நீளமுள்ள தடி மீட்கப்பட்டுள்ள சம்பவமொன்று கல்முனையில் இடம்பெற்றுள்ளது.

கல்முனை வடக்கு ஆதரவைத்த சாலையில் உயிருக்கு போராடிய நிலையில் விபத்தில் சிக்கிய இளைஞன் அவசர சிகிச்சைப் பிரிவில் செவ்வாய்க்கிழமை (25) அனுமதிக்கப்பட்டார். பல மணி நேர அவசர சத்திர சிகிச்சையின் பின்னர் குறித்த இளைஞன் உயிர் பிழைத்த சம்பவம் கல்முனையில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கல்முனை நாவிதன்வெளி பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய பாடசாலை மாணவன் நுங்கு பறிப்பதற்காக பனை மரத்தில் ஏறிய போது தவறி விழுந்துள்ளான்.

இந்நிலையில் குறித்த இடத்தில் பயற்றை செடிக்கு நாட்டப்பட்டிருந்த கிளிசரியா மரத்தின் கம்பு குறித்த இளைஞரின் குத வழியாக பாய்ந்து சலப்பை, ஈரல், நுரையீரல், பிரிமென்தகடு உட்பட உடலின் முக்கிய பாகங்களாக காணப்படுகின்ற 15 பாகங்களை கிழித்துக் கொண்டு மார்பக பக்கமாக குறித்த தடி வெளியில் தெரிந்துள்ளது.

உயிருக்கு போராடிய மாணவன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சம்பவத்தை கேள்வியுற்று அவசர சிகிச்சை பிரிவுக்கு விரைந்து சென்ற மருதமுனையை சேர்ந்த பிரபல அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர் டொக்டர் ஏ.டபுள்யூ.எம்.சமீம் தலைமையிலான வைத்திய குழுவினர் குறித்த இளைஞரின் உயிருக்கு ஆபத்து இல்லாத வகையில் பல மணி நேர நீண்ட அறுவை சிகிச்சையின் பின்னர் இரண்டடி நீளமுடைய தடியை வயிற்றுப் பகுதியில் இருந்து வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். தற்போது குறித்த இளைஞன் ஆரோக்கியமான நிலையில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் வெற்றிகரமாக செய்யப்பட்ட இந்த சத்திர சிகிச்சை குறித்து வைத்திய நிபுணர் ஏ.டப்ளியு.எம்.சமீம் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

‘எனது 25 வருட கால அறுவை சத்திர சிகிச்சை வரலாற்றில் இது ஒரு சவாலான அறுவை சிகிச்சையாகும். இதற்கு முன்னர் இது போன்ற ஓர் அறுவை சிகிச்சை இலங்கையில் எங்கும் நடைபெற்றதாக நான் அறியவில்லை. எனது மேலதிகாரியின் ஆலோசனையை பெற்று நம்பிக்கையுடன் இந்த சத்திர சிகிச்சையை முன்னெடுத்தேன் இறைவன் உதவியால் வெற்றிகரமாக செய்ய முடிந்துள்ளது

குறித்த அறுவை சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு என்னுடன் ஒத்துழைப்பு வழங்கிய வைத்திய பணிப்பாளர் உள்ளிட்ட வைத்திய குழுவினர் அவசர சத்திர சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் வைத்தியர்கள் தாதியர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்’ என தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.