பலவீனமான வேட்பாளரை களமிறக்கினால் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகுவேன் ; ஜனாதிபதி ரணிலுக்கே எனது ஆதரவு : பிரசன்ன ரணதுங்க!



ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலுக்கு பலவீனமான வேட்பாளரை களமிறக்கினால் கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவேன். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை உள்ளவர் பொதுஜன பெரமுனவில் தற்போது இல்லை என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எமக்கும் அரசியல் கொள்கை ரீதியில் பாரியதொரு வேறுபாடுகள் காணப்படுகிறது.

நாடு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த போது எதிர்கால அரசியல் பற்றி ஆராய்ந்துகொண்டு சோதிடம் பார்த்துக்கொண்டிருக்காமல் தனி மனிதனாக ரணில் விக்கிரமசிங்க பாரிய சவால்களை ஏற்றுக் கொண்டார்.

2022ஆம் ஆண்டை காட்டிலும் சமூக கட்டமைப்பு தற்போது மாற்றமடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பு என்ற குற்றச்சாட்டு மாத்திரம் முன்வைக்கப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டுக்கு முன்னர் அத்தியாவசிய பொருட்களி;ன் விலைகள் குறைவடையும்.

நாட்டையும்,நாட்டு மக்களையும் பொருளாதார நெருக்கடியில் இருந்து பாதுகாத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டு மக்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.

பொருளாதார நெருக்கடியின் போது அரசாங்கத்தை பொறுப்பேற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் முன்வரவில்லை.

நெருக்கடியான சூழ்நிலையில் சவால்களை ஏற்படுதுதான் சிறந்த தலைமைத்துவம் மாற்றம் வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் சஜித் பிரேமதாச அல்லது அனுர திஸாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் பின்னர் 2022ஆம் ஆண்டு காலப்பகுதியை போன்று பொருளாதார நெருக்கடியான சூழல் ஒன்று ஏற்பட்டால் அவர்கள் எவ்வாறு அதனை சமாளிப்பார்கள்.ஆகவே மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.

அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகவோ அல்லது பொதுவேட்பாளராகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறக்கப்பட வேண்டும் என்பதை பொதுஜன பெரமுனவிடம் வலியுறுத்தியுள்ளேன்.

பலவீனமான வேட்பாளரை ஜனாதிபதி வேட்பாளராக பொதுஜன பெரமுன களமிறக்கினால் கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி ரணில் வி;க்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவேன்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை உள்ளவர் ஒருவர் பொதுஜன பெரமுனவில் தற்போது இல்லை. கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தகைமையற்றவர். இதனை நான் அவரிடமே குறிப்பிட்டுள்ளேன் என்றார்.