அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை : ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன !


ஸ்ரீ லங்கா டெலிகொம்,இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் உட்பட அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம்.பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கு அமையவே ஜனாதிபதி செயற்பட வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும்,அரசியல் தரப்பினருக்கும் இடையில் கொழும்பில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்க போவதில்லை.வெளிநாட்டு முதலீடுகளுக்கு எவ்வித தடைகளையும் நாங்கள் ஏற்படுத்த போவதில்லை.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்காமல் தேசிய முதலீட்டாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் தனியார் நிறுவனங்களிடம் உள்ள நிலையில் மிகுதியாக உள்ள பங்குகளையும் தனியார் மயப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளமை பிரச்சினைக்குரியதாகும்.மிகுதியாக உள்ள பங்குகளை தேசிய முதலீட்டாளர்களுக்கு வழங்கலாம்.

இலங்கை காப்புறுதி காப்புறுதி நிறுவனம் இலாபமடைந்துள்ள நிலையில் அதனையும் தனியார் மயப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.தேசிய வளங்களை மறுசீரமைப்பது குறித்து சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.

பூகோள அரசியல் போட்டித்தன்மை நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள பின்னணியில் போட்டித்தன்மையான நாடுகள் இலங்கையில் அரச நிறுவனங்கள் அல்லது முக்கிய கேந்திர மையங்கள் ஊடாக முதலீடுகளை முன்னெடுக்க விசேட கவனம் செலுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனம் உள்ளிட்ட அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்க போவதில்லை.

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது பொதுஜன பெரமுனவின் கொள்கையல்ல.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் தான் தெரிவு செய்தோம்.ஆகவே அவர் எமது கொள்கைக்கு அமையவே செயற்பட வேண்டும் என்றார்.