சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன இன்று (01) அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
சுகாதார அமைச்சில் இன்று காலை 72 சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.
அதற்கமைவாக, கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான யோசனை அறிக்கையானது, நிதி அமைச்சின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் அண்மையில் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தன.
இந்த பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சரினால் தொழில்நுட்பக் குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.