அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொண்டு ஜனாதிபதி பதவியை இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்காக கருஜயசூரிய தலைமையில் குழுவொன்றையும் அமைத்துள்ளார் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் விடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவது தொடர்பாகக் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெறும் என ஜனாதிபதி மற்றும் அரச தரப்பினர் ஆரம்பத்திலிருந்து தெரிவித்து வருகின்றனர். தற்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகக் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அதேபோன்று கூட்டணி அமைத்துக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தொடர்பாகவும் கட்சிகளுக்கிடையில் பேசப்பட்டு வருகின்றன.
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியை இரத்துச் செய்வதற்காக முன்னாள் சபாநாயகர் கருஜய தலைமையில் சட்டத்தரணிகள் குழுவொன்றையும் நியமித்து, அரசியலமைப்பு திருத்தும் மேற்காெண்டு, ஜனாதிபதி பதவியை இல்லாமல் செய்வதற்கு தற்போது வேகமாக செயற்பட்டு வருகிறது. இது தொடர்பாக தற்போது நாட்டுக்குள் பாரியளவில் பேசப்பட்டு வருகிறது.
அதனால் இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமா, மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு இடம்பெறுமா அல்லது பாராளுமன்ற தேர்தல் இடம்பெறுமா என நிச்சயமாகத் தெரிவிக்க முடியாமல் இருக்கிறது அதனால் தற்போதுள்ள நிலைமையில் என்ன நடக்கப்போகிறது என எங்களுக்கு மாத்திரமல்ல, என்ன செய்வதென ரணில் விக்ரமசிங்கவுக்கும் தெரியாமல் இருக்கும். ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமலாக்குவதற்கு மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு சென்றால் அதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டு கைகளையம் உயர்த்தி ஆதரவளிப்போம் என்றார்.