அகிலம் போற்றும் ஆசிரிய சேவையில் முப்பத்தேழு வருடங்கள் சேவை செய்து அகவை அறுபதில் ஓய்வு பெறுகின்றார்!

(சித்தா)

திருமதி. நிர்மலா வேலாயுதம்பிள்ளை அவர்கள் தான் பிறந்த கிராமமான  வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியினையும் களுதாவளை மகா வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வியினையும் வின்சென்ற் மகளிர் உயர்தர பாடசாலையில் உயர்கல்வியினையும் கற்ற இவர் 1984 இல் ஆசிரிய சேவையில் தன்னை இணைத்துக் கொண்டு நாவலப்பிட்டி கதிரேஷன் கனிஷ;ட வித்தியாலயத்தில் முதல் நியமனத்தைப் பெற்று மூன்று வருட சேவையினை ஆற்றி  மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இணைந்து பயிற்சி பெற்ற இவர் பயிற்றப்பட்ட ஆசிரியராக  களுதாவளை மகா வித்தியாலயத்தில் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து களுதாவளை இராமகிருஷ;ண வித்தியாலயத்திலும் பெரியகல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலயத்திலும் பின் களுதாவளை புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை வித்தியாலயத்திலும் தமது கற்பித்தல் பணியை நிறைவாகச் செய்து இன்று 27.05.2021 ஆசிரியச் சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றார். 

இவர் 2013 ஆம் ஆண்டு சிறப்பான பணி செய்யும் ஆசிரிய சேவைக்காக அரசினால் வழங்கிக் கௌரவிக்கப்படும் 'குருபிரதீபா' விருதைப் பெற்றதோடு புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை வித்தியாலயத்தில் பிரதி அதிபராகவும்  பணி நிறைவேற்று அதிபராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவரது சேவைக்காலத்தில் பாடசாலையில் நடைபெறுகின்ற அனைத்து புறக்கிருத்திய மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் முன்னின்று அர்ப்பணிப்போடு பாடசாலைக்கும் பாடசாலைச் சமூகத்திற்கும் நற்பெயரை ஈட்டிக் கொடுத்தார். அத்துடன் பின்னடைவான மாணவர்களுக்கு கற்பிப்பதில் ஆர்வம் உடையவராக காணப்பட்டு பாடசாலையின் அடைவுமட்டத்தை  உயர்த்துவதில் பாரிய பங்காற்றியுள்ளார். இவரிடம் கற்ற மாணவர்கள் ஆசிரியர்களாகவும் அரச திணைக்களங்களிலும் பணிபுரிந்து வருகின்றமை இவரது சேவைக்கு அணி சேர்ப்பனவாகும். வெல்லாவெளியைப் பிறப்பிடமாகக் கொண்ட போதும் வழுவாத புகழுக்குரிய களுதாவளைப் பதியில் தமது வாழ்க்கைத் துணையாக ஓய்வு நிலை கிராம உத்தியோகத்தரும் சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபை முன்னாள் தலைவரும் ஆகிய திரு. கா. வேலாயுதம்பிள்ளை அவர்களை இணைத்துக் கொண்டார். இவரது ஏகபுத்திரி செல்வி. ஜகதாம்பிகா அவர்களும் நல்லாசிரியையாக பணியாற்றுவது இவரது பணியைத் தொடர்வதாக உள்ளது.