வாகனத்தை சோதனையிட்டு கொண்டிருந்த பொலிஸார் உள்ளிட்ட இருவர் விபத்தில் பலி


இன்று (23) அதிகாலை 4.30 மணியளவில் ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 52 வயதான உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட இருவர் மரணமடைந்துள்ளனர்.

வெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாராளுமன்ற வீதியில், ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலை சுற்றுவட்டம் மற்றும் மேம்பாலத்திற்கு இடைப்பட்ட பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொழும்பு பொலிஸ் அவசர அழைப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் குழுவினர், குறித்த பகுதியில் பட்டா வகை வாகனமொன்றை சோதனையிட்டுக் கொண்டிருந்த வேளையில், பத்தரமுல்லை திசையிலிருந்து பொரளை திசை நோக்கி அப்பகுதியால் வந்த வேன் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

இச்சம்பவத்தில், கொழும்பு பொலிஸ் அவசர அழைப்பு பிரிவைச் சேர்ந்த, குறித்த பொலிஸ் சோதனைக் குழுவிற்கு பொறுப்பான 52 வயதான உப பொலிஸ் பரிசோதகரும், நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டுக் கொண்டிருந்த பட்டா வகை வாகனத்தின் உதவியாளர் ஆகிய இருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து தலவத்துகொடவைச் சேர்ந்த குறித்த வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் இவ்வாறு வாகன விபத்துகள் அதிகரித்துள்ளமையானது கவலைக்குரியது எனத் தெரிவித்துள்ள அஜித் ரோஹண, சீருடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும் இதற்கு பலியாகி வருகின்றமையும் அதிகரித்துள்ளதாகவும், இதனைத் தடுக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பசறையில் இடம்பெற்ற கோர விபத்தைத் தொடர்ந்து, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் பாரிய 9 விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, வாகன விபத்து எனும் பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.