கொரோனா தொற்று இயற்கையாக வந்ததா? அல்லது யாராலும் உருவாக்கப்பட்டதா? என சிந்திக்கும் அளவுக்கு நாம் கல்வி வளர்ச்சியை அடைந்துள்ளோம்
(நூருல் ஹுதா உமர்)
எமது கல்வி முறையால் பட்டதாரிகள், பொறியலாளர்கள், விஞ்ஞானிகளையும் மற்றும் பல புத்திஜீவிகளையும் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் நல்ல மனிதர்களை உருவாக்க தவறியிருக்கிறோம். இன்றைய உலகுக்கு நல்ல மனிதப்பண்புகள் கொண்ட மனிதர்கள் தேவையாக இருக்கிறது. மனிதத்துவம் ஒன்று சேரக்கூடிய கல்வி முறை பற்றி சிந்திக்க வேண்டும். திறமையான எமது நாட்டின் துறைசார் நிபுணர்கள் சர்வதேச அளவில் தமது திறமைகளை பட்டை தீட்டிக்கொண்டாலும் எமது நாட்டின் வளங்களை சரியாக பயன்படுத்தக்கூடிய கல்வி எமது நாட்டின் சர்வ கலாசாலைகளில் போதிக்கப்படவில்லை என தேசிய காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற விதத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
கல்வி என்பது வெறுமனே பட்டதாரிகளை, உத்தியோகத்தர்களை, துறை சார் புத்திஜீவிகளை உருவாக்குவது மட்டுமல்ல. கல்வி மூலம் மனிதன் இந்த உலகில் பிறந்த நோக்கம், அவனில் உள்ளடக்கப்பட்டிருக்கும் மனிதத்துவத்தை வெளியே கொண்டு வருவதற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உலகுக்கு இறைவனால் அனுப்பப்பட்ட சகல இறைத்தூதர்களும், நபிமார்களும், மார்க்க வழிகாட்டிகளும் கற்றவர்களாக துறைசார் புத்திஜீவிகளாக இருந்தார்களா என்பதை விடவும் மனிதர்களையும், மனித மனங்களையும் புடம் போடுபவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு எல்லா துறைகளும் இயலுமானதாக இருந்தது.
வைத்தியம், கணக்கு, ஆலோசனை என எதுவாக இருந்தாலும் இறைத்தூதர்களால் முடியுமானதாக இருந்தது. இன்று உலகிலும் ஏன் எமது நாட்டிலும் பல பல்கலைக்கழகங்களை உருவாக்கியிருக்கிறோம். அதில் பல பட்டதாரிகளையும், பொறியலாளர்கள், விஞ்ஞானிகளையும் மற்றும் பல புத்திஜீவிகளையும் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் நல்ல மனிதர்களை உருவாக்க தவறியிருக்கிறோம். இன்றைய உலகுக்கு நல்ல மனிதப்பண்புகள் கொண்ட மனிதர்கள் தேவையாக இருக்கிறது.
இன்று ஒரு நாட்டைத் தாக்கும் அல்லது ஒரு மனிதனை தாக்கும் எல்லா வகையான ஆயுதங்ககளையும் எமது கல்வி வளர்ச்சியினால் நாம் கண்டுபிடித்துள்ளோம். இப்போது கூட கொரோனா தொற்று இயற்கையாக வந்ததா? அல்லது யாராலும் உருவாக்கப்பட்டதா? என சிந்திக்கும் அளவுக்கு நாம் கல்வி வளர்ச்சியை அடைந்துள்ளோம். ஆனால் இந்த காலகட்டத்தில் மனிதத்துவம் குறைந்து கொண்டு போகிறது. ஆத்மீக கல்வியை கொண்டு கல்வி முறை புனரமைத்து பிள்ளைகளின் மனதில் மாற்றங்களை கொண்டு வருவது கட்டாயமாகும்.
தமிழ் மக்கள் சிவனொளிபாத மலை என்றும், சிங்கள மக்கள் ஸ்ரீபாத என்றும், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஆதம் (அலை) அவர்களின் பாதம் என்கிறார்கள். இப்படியான ஆத்மீகம் பொருந்திய உலகின் முக்கிய இடத்தில் வாழும் நாம் மக்கள் மக்களாக வாழக்கூடிய கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும். மனிதத்துவம் ஒன்று சேரக்கூடிய கல்வி முறை பற்றி சிந்திக்க வேண்டும். திறமையான எமது நாட்டின் துறைசார் நிபுணர்கள் சர்வதேச அளவில் தமது திறமைகளை பட்டை தீட்டிக்கொண்டாலும் எமது நாட்டின் வளங்களை சரியாக பயன்படுத்தக்கூடிய கல்வி எமது நாட்டின் சர்வ கலாசாலைகளில் போதிக்கப்படவில்லை.
விவசாயம், பால் உற்பத்தி போன்ற துறைகளை விருத்தி செய்ய சகல வளங்களும் எமது நாட்டில் இருந்தும் அதனை சரியாக பயன்படுத்தும் கல்வி முறை எம்மிடமில்லை. எமது கல்வியை வெறுமனே புத்தக கல்வியுடன் நிறுத்தி விடாமல் ஆக்கபூர்வமான கல்விமுறையை கொண்டுவர கல்வி கொள்கையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். தமிழர், முஸ்லிம், சிங்களவர் என்று பிரிந்து செல்லும் விடயம் இங்கு இருக்கக்கூடாது.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் ஒரு பகுதியில் உள்ள ஆலையடிவேம்பு பாடசாலைகள் திருக்கோவிலுடன் இணைகிறார்கள். பொத்துவிலில் உள்ள சிங்கள பாடசாலைகள் அம்பாறையுடனும், தமிழ் பாடசாலைகள் திருக்கோவிலுடனும் இணைகிறார்கள். இவ்வாறான முரண்பாடான பிரச்சினைகளிலிருந்து நாங்கள் விடுபட்டு சுதந்திரமாக நிதானமாக ஒரு கல்விக்கொள்கையை கொண்டு செல்வதற்கு நாங்கள் வித்திடவேண்டும் என்றார்.