உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலிலுள்ள முகமது கனிபா முகமது அக்கிரம், நுவரெலியா பயிற்சி முகாமிற்கு பயிற்சியாளர்களை கொண்டு செல்ல பயன்படுத்திய டொல்பீன் ரக வான் ஒன்று காத்தான்குடி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனையிலுள்ள ஒருவருக்கு, குறித்த வாகனம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று (வியாழைக்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸார் மீட்டு, காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை, மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து, உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 25ம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டு, மெனராகலை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முகமது கனிபா முகமது அக்கிரம் பெயரில் வாங்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்த எவரி ரக கார் ஒன்று காத்தான்குடி றிஸ்வி நகரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் மீட்டனர்
இதனையடுத்து மாவட்ட குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி டி.எஸ்.டி.பண்டார தலைமையில் பொலிஸார் மேற்கொண்டுவந்த விசாரணையில் மேற்குறித்த சந்தேகநபரின் பெயரில் டொல்பீன் ரக வான் ஒன்றும் இருப்பதாக கண்டறிந்த நிலையில், குறித்த வான் கண்டியில் வாகன விற்பனை நிலையத்தில் கடந்த 3 மாதங்களாக விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
எனினும், விற்க முடியாததையடுத்து சம்மாந்துறையிலுள்ள வாகன விற்பனை நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 4ம் திகதி அட்டாளைச்சேனை 6ம் பிரிவு கோணாவத்தை வீதியிலுள்ள ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளதாக குற்றவியல் பிரிவு பொலிஸார் கண்டறிந்தனர்.
இதனையடுத்து குறித்த வானை நேற்று மீட்டு, காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.