சனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை

ஆர்.சயனொளிபவன் -  (தம்பிலுவில்)

கடந்த 60 வருடங்களில்
  • தமிழர் சனத்தொகையில்   6 %   வீழ்ச்சி 
  • முஸ்லிம் சனத்தொகையில்  5 %   வளர்ச்சி 
  • 1960 இல் அம்பாறை தேர்தல் தொகுதி 
  • 1963 இல் அம்பாறை மாவட்டம்  உருவாக்கம்  
  • 1977 இல் திருகோணமலையில் சேருவில  தொகுதி உருவாக்கம்  
  • திருமலை மாவட்டத்தில்  முஸ்லிம்களின்   சனத்தொகையில்  பெரும் வளர்ச்சி -  தற்போதைய சனத்தொகையில்  50 %
  • 1971 - 2001 பெருமளவு எல்லை மாற்றங்களுக்குள்ளான அம்பாறை தேர்தல் தொகுதி 

  • கிழக்கு வாழ் மூவின மக்களின் தலைவிதியை நிர்ணயிக்க கூடிய முக்கிய காரணிகளாக சனத்தொகை, அரசியல் ,பொருளாதாரம் , கல்வி போன்றவற்றை கருதலாம். இக் கட்டுரையில் சனத்தொகையில் ஏற்பட்ட மாற்றங்களுக்குரிய காரணங்களை ஆராய்வோம்
தமிழ் மக்களின் சனத்தொகை வீழ்ச்சிக்குரிய முக்கிய காரணிகள்
 - போரினால் ஏற்பட்ட இடம்பெயர்வும்  உயிரிழப்புகளும் 


வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மிக நீண்டகால யுத்தம் கிழக்கு மாகாணத்திலும் பல பாரிய பின்னடைவுகள தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது நடைபெற்ற யுத்தத்தால் அண்ணளவாக 10 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வட கிழக்கில் இருந்து பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இவற்றுள் கிழக்கு மாகாணத்திலிருந்து அண்ணளவாக 50,000 பேர் வரை ஐரோப்பிய,அமெரிக்க, ஆஸ்திரேலியா நாடுகளுக்கும், மற்றும் 11,000 பேர் வரை முக்கியமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி, நிலாவெளி, சம்பூர் மூதூர் போன்ற பகுதிகளிலிருந்து இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள பல பகுதிகளிலும் இடம்பெயர்ந்துள்ளனர் . 


அத்தோடு நீண்ட போரில் அகப்பட்டு அப்பாவி மக்களாகவும், காணாமல் போனமையினாலும் , போராளிகளாகவும் பல ஆயிர கணக்கான தமிழ் மக்கள் தமது உயிர்களை மாய்த்துள்ளனர் . இதனைவிட எண்ணற்ற இளம் பெண்கள் திருமணமாகி மிக குறுகிய காலத்தில் தமது கணவன்மாரை இழந்து விதவைகளாக்கப்பட்டும் , மேலும் போர் சூழலால் திருமண வயது நீண்டு போனமை, திருமணமானாலும் போர் சூழ்நிலையால் பிள்ளைகள் பெறாமை, போன்ற காரணங்கள் தமிழ் மக்களின் சனத்தொகை வளர்ச்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது .


 -  சனத்தொகை கட்டுப்பாடு 
முக்கியமாக இந்த கலாசாரம் தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவில் கடைப்புடிக்கப்பட்டுவருகின்ற ஒரு விடயமாக உள்ளது , நாம் இருவர் நமக்கு இருவர் என்ற வகையில் குடும்பங்கள் அமைவது தமிழ் சமூகத்திடம் காணக்கூடியதாகவுள்ளது. ஆனால் அதே வேளை சகோதர சமூகம் சராசரியாக நான்கு குழந்தைகளை பெறுகின்ற தன்மையில் தற்போதும் உள்ளனர்.

- தொடர்ந்து வந்த அரசாங்களால் திட்டமிட்ட முறையில்  குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலுள்ள - அம்பாறை தேர்தல் தொகுதிக்குள்  மேற்கொள்ளப்பட்ட  பாரிய எல்லை மாற்றங்கள் , குடியேற்றங்கள் 


1980 இல் அம்பாறை தேர்தல் தொகுதி   49,000 வாக்காளர்களை  கொண்ட ஒரு தொகுதியாக  காணப்பட்டது.   இன்றுவரை   அண்ணளவாக 100,000 வாக்காளர்களையும்,  100 கிராமசேவையாளர் பிரிவுகளையும் மற்றைய மாவட்டங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு   அம்பாறை தேர்தல் தொகுதியுடன் இணைத்துகொள்ளப்பட்டுள்ளது .மேற்குறிப்பிட்ட  கிராமசேவையாளர் பிரிவுகள்  பொலநறுவை, மாத்தளை பதுளை மாவட்டங்களில்  இருந்து   அம்பாறை தேர்தல் தொகுதிக்குள் சேர்க்கப்பட்டுள்ளது  இம் முயற்சியானது சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ந்து  வரும் சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பாரிய குடியேற்ற்றங்களில் ஒன்றானதாகும்.இவற்றுள்  கவனிக்கக்கூடிய விடயம் என்னவெனில் முக்கியமாக முஸ்லீம் அரசியல்வாதிகள் அமைச்சரவையில் இருந்த போதே  இந்த பாரிய எல்லை மாற்றங்கள்   அரங்கேறியுள்ளது. அத்தோடு இம் மாற்றமானது  அம்பாறை மாவட்டத்தில் உள்ள  முஸ்லீம் மக்களின் பெரும்பான்மைக்கு பெரும் அச்சுறுத்தலையும்  ஏற்படுத்தியுள்ளது.

அம்பாறை தேர்தல்  தொகுதியானது  1960ல் கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது  சிங்கள மக்களை பிரதிநிதித்துவபடுத்தக்கூடிய   தொகுதி  என்பது  குறிப்பிடதக்கது. இதனைத் தொடர்ந்து 1963 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.  இதனைவிட 80களில் அம்பாறை தேர்தல் தொகுதியில் ஏற்படுத்தப்பட்ட  எல்லை மாற்றங்கள்  மேலும் இரு    பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும்  நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட  திட்டமாகும். இம் மாற்றாங்களோடு மொத்தமாக அல்லது கூடுதலான பட்சத்தில் சிங்கள சமூகத்தை சேர்ந்த மூன்று பேர் இம்  மாவட்டத்தில்  இருந்து பாராளுமன்றம் செல்லக்கூடிய ஒரு சந்தர்ப்பதை  உருவாக்கியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்திற்குள் சேர்க்கப்பட்ட சேருவேல தேர்தல் தொகுதியும் அத்தோடு இந்த மாவட்டத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு  வரும் குடியேற்றமும்   


 1977 ஆம் ஆண்டு  திருகோணமலை மாவட்டத்தில் புதிதாக சேருவேல தேர்தல் தொகுதி சேர்க்கப்பட்டுள்ளது  இந்த தேர்தல் தொகுதியானது  கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட இரண்டாவது பெருன்பான்மை சிங்கள மக்களை மையப்படுத்திய தொகுதியாகும். அத்தோடு ஒரு கட்ட   குடியேற்றம் திருகோணமலை மாவட்டத்தில் முக்கியமாக வடக்கு, தெற்கு பகுதிகளில்  பொலநறுவை மற்றும் அனுராதபுரம் பகுதிகளை அண்டிய வளமுள்ள நில பரப்புகளையும் மையப்படுத்தியும்  ,இரண்டாவது கட்ட  குடியேற்றம்  வேலைவாய்ப்புகளின்  ஊடாக   திருகோணமலை நகர்  பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது . 
இம் மாற்றாங்களோடு  மொத்தமாக அல்லது கூடுதலான பட்சத்தில் சிங்கள சமூகத்தை சேர்ந்த நான்கு பேர் வரை  கிழக்கு மாகாணத்தில் இருந்து பாராளுமன்றம் செல்லக்கூடிய ஒரு தன்மையை  உருவாக்கியுள்ளது 

மேற் குறிப்பிட்ட மாற்றங்கள்    கிழக்கு மாகாணத்தில் ஒரு புதிய  தோற்றப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.  அதாவது  70 களுக்கு முன்  தமிழ் முஸ்லீம் இனங்கள் வாழ்ந்த கிழக்கு மாகாணம் தற்போது மூன்றாவதாக சிங்கள இனத்தையும் சேர்த்து பார்க்க வேண்டிய ஒரு  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இம்மாற்றமானது பல பிரதிகூலமான தாக்கங்களை முக்கியமாக தமிழ் சமுதாயத்திற்கு ஏற்படுத்த தொடங்கியுள்ளது.  

1963 ஆம் ஆண்டுகளில் மூன்று மாவட்டங்களின் சனத்தொகை விபரத்தை விகிதாசாரத்துடன் பார்ப்போம்


மூவின மக்களின் சனத்தொகை 1963 இல் மாவட்ட   அடிப்படையில் பின்வருமாறு



2018 சனத்தொகை புள்ளிவிபரத்தின் படி கிழக்கில் உள்ள முன்று மாவட்டங்களின் சனத்தொகை விபரம் மாவட்ட அடிப்படையில் பின் வருமாறு அமைந்துள்ளது


கடந்த 55 வருட காலத்தில் (1963-2018) சனத்தொகையானது மாவட்ட அடிப்படையில்


மேற்குறிப்பிட்ட  தரவுகளை எடுத்து பார்ப்போமேயானால் கடந்த 55 வருடங்களில் மூன்று இனங்களின் சனத்தொகையில் பின்வரும்   மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது, 

சனத்தொகை  வளர்ச்சியில்    மிககூடுதலான அளவு   முஸ்லிம் சமூகத்திடம் காணப்படுகின்றது இம் மக்களை பொறுத்தளவில் 1963 இல்  184,434 ஆக  இருந்த சனத்தொகை தற்போது 2018 ம் ஆண்டு 672,350 ஆக  மாறியுள்ளது. இந்த வளர்ச்சியானது  365%  ஆகவுள்ளது , மொத்த சனத்தொகையில் 1963இல்  34.6% ஆக  இருந்த முஸ்லீம் மக்கள் தொகை தற்போது 39.30% ஆகவும்  மாறியுள்ளது. இவர்களின் சனத்தொகை வளர்ச்சி 5% ஆல்  கூடியுள்ளது.  முக்கியமாக பெரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டபோதும்.முஸ்லீம் மக்களை பொறுத்தளவில் அவர்கள் தங்களுடைய இருப்பை  மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.   

  சனத்தொகை வளர்ச்சியின்  இரண்டாவது  இடத்தில்    சிங்கள சமூகம்  காணப்படுகின்றது அதாவது 1963 இல்  108,636 ஆக  இருந்த சனத்தொகை தற்போது 2018 ம் ஆண்டு 377,000 ஆக  மாறியுள்ளது. இந்த  வளர்ச்சியானது 349% ஆகவும் உள்ளது , அத்தோடு மொத்த சனத்தொகையில் 1963 இல்  20.4% மாக இருந்த  சனத்தொகை 22% மாறியதோடு தற்போது கிழக்கு மாகாணம் மூன்று இனங்கள் வாழ்கின்ற ஒரு மாகாணமாக திட்டமிட்டமுறையில் மாற்றப்பட்டுள்ளது.

தமிழ் மக்களை பொறுத்தளவில் தங்களுடைய இருப்பை கிழக்கு மாகாணத்தில் இழந்த  ஒரு சமூகமாக காணப்படுகின்றது .1963இல் 239,720 ஆக இருந்த சனதொகை தற்போது 2018 ம் ஆண்டு 660,720 ஆக  மாறியுள்ளது.இந்த வளர்ச்சியானது  275%  ஆகவுள்ளது , மொத்த சனத்தொகையில் 1963இல் 45% ஆக  இருந்த தமிழ்  மக்கள் தொகை தற்போது 38.6.% ஆக  மாறியுள்ளது. தமிழ்  மக்களின் சனத்தொகை  6.4 % ஆல்  வீழ்ச்சியடைந்துள்ளது

இந்த புள்ளிவிபரங்களில் இருந்து  மிகதுல்லியமாக இரு முக்கிய விடயங்கள் தென்படுகின்றன

  • முஸ்லிம்  மக்களின் சனத்தொகையானது  முக்கியமாக இயற்கையான  சனத்தொகையினால்    திருகோணமலை மாவட்டத்தில் 1981இன்  கணக்கெடுப்பின்பொது 75,000 இருந்த சனத்தொகை 2007 யில் 151,000 ஆக  கூடியுள்ளது. 

திருகோணமலை மாவட்டம்  

சிங்கள மக்களை பொறுத்தளவில் எல்லை மாற்றம் மற்றும் பாரிய அளவிலான குடியேற்றங்கள் மூலம் அம்பாறை தேர்தல் தொகுதியில் இரு கட்டமாக அதாவது 1971 இருந்து 1981 காலப்பகுதியில் 82,000 இருந்த சிங்கள மக்கள் தொகை 147,000 ஆகவும் இரண்டாவது கட்டமாக 1981 இருந்து 2001 ஆண்டு காலப்பகுதியில் 147,000 ஆக இருந்த சிங்கள மக்கள் தொகை 237,000 மாற்றம் கண்டுள்ளது. 


                                                 அம்பாறை மாவட்டம் 
அதே வேளை மிக முக்கியமாக தமிழ் மக்களின் சனத்தொகை 1963 இல் 45% இல் இருந்து 2018 இல் 38% ஆக மாறியதோடு அதிகூடிய சனத்தொகையாக இருந்த தமிழ் மக்கள் தற்போது இரண்டாவது நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . தற்போதைய சனத்தொகை வளர்ச்சி விகிதத்தை வைத்து பார்க்கும் போது தமிழ் மக்களின் சனத்தொகை வளர்ச்சி வீதம் வருடத்திற்கு 1.5 % மும், முஸ்லிம் மக்களின் சனத்தொகை வளர்ச்சி விகிதம் வருடத்திற்கு 2 % மும் ஆகவுள்ளது . இந் நிலை தொடருமாயின் ஒரு குறிப்பிட காலப்பகுதியில் தமிழ் மக்களின் சனத்தொகை 35% ஆக மாறக்கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றது . 


தமிழ் சமூகத்தை ஒரு முறையான திட்டமிடலுடனும் ஒரு புதிய தூர நோக்குள்ள கொள்கையுடனும் கொண்டு செல்லாவிடின் அரசியல் , பொருளாதாரத்தில் , நலிவடைந்தும் , மற்றும் கல்வியில் பின்னடைவு காணும் ஒரு சமூகமாகவும் மாறுவதற்குரிய சந்தர்ப்பங்கள் கூடுதலாக கானப்படுகின்றது 

தமிழ் மக்கள் தொடர்பான எந்த முடிவு எடுக்கும்போதும்  இந்த சனத்தொகை மாற்றத்தையும் கருத்திற் கொண்டு முடிவுகள் எடுப்பதே மிகவும் பொருத்தமானதாக அமையும் .


தம்பிலுவில்


தொடர்ந்து வரும் பதிவுகளில் கிழக்கின் அவலம் என்ற தலைப்பில் கீழ் ஓவ்வொரு முக்கிய விடயத்தையும் ஆராயவுள்ளோம்