தரத்தைத் திணிப்போராக மட்டும் ஆசிரியர்கள் செயற்பட முடியாது!

“கற்பித்தல் ஒரு ஆற்றுகை கலையாகின்றது. நேரடியானதும், நாடக பாங்கானதுமான செயற்பாடாக கற்பித்தல் அமைகின்றது. இந்நிலையில் ஆசிரியர்களை தெரிவு செய்தலை மிகுந்த நிதானமாக்க வேண்டியுள்ளது. தரத்தைத் திணிப்போராக மட்டும் ஆசிரியர்கள் செயற்படாது, மகிழ்ச்சியும் தூண்டலும் நம்பிக்கையும் ஊட்டுவோராக அவர்கள் செயற்பட வேண்டும்.”

இவ்வாறு தமது கல்வியியல் ஆராய்ச்சியில் செய்மோர் சராசன் (Seymour Sarason 1919) கூறுகிறார்.

ஆசிரியர் என்பவரை பாடசாலை சூழலுக்குள் நின்று, ஆசிரிய – மாணவ இடைத் தொடர்புடன் ஒப்பிட்டு நோக்குகையில் எம்மால் உணரப்படக் கூடியவை பல. வெறுமனே ஆசிரியர் என்பவரை கற்பித்தல் தொழிலை வாண்மையுடன் செய்பவராகவும், ஒரு ஆலோசனையாளராகவும் மட்டுமேயன்றி கற்றல் கற்பித்தல் சூழலை சாதகமானதாக மாற்றியமைக்க பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று தம்மை முழுதாய் அர்ப்பணிக்கும் ஒரு ஜீவனாகவே கருத வேண்டியுள்ளது.


ஒரு பாடசாலை சூழலில் அல்லது ஒரு வகுப்பறைச் சூழலில் இருந்து அவதானிக்கும் பொழுது மட்டுமே இதன் உண்மைத்தன்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

கல்வியமைச்சின் 2012/37ம் இலக்க சுற்றறிக்கைக்கு இணங்க ஆசிரியர்களின் விழுமியம் மிக்க செயற்பாடுகள் தொடர்பான ஒழுக்க விழுமிய முறைகள் பின்வருமாறு வரையறுக்கப்படுகின்றன.

ஆசிரியர்கள் தனிப்பட்ட ரீதியில்.......

ஆசிரியர்கள் பெற்றோருக்கு பதிலான.....

ஆசிரியர் அறிவு வழங்குபவர், திறமை மற்றும் சிறந்த மனப்பாங்கு விருந்தியாளராக........

ஆசிரியர் மதிப்பீட்டாளராக.....

ஆசிரியர் ஆக்கத்திறன் மிக்கவராக மற்றும் வழிகாட்டுனர் மற்றும் ஆலோசனையாளராக....

ஆசிரியர் தொழில்சார் உத்தியோகத்தராக......

ஆசிரியர் முகாமைத்துவத்தின் பொறுப்பாளராக.....

 சமூகம் மற்றும் தேசத்தின் முன்னோடியாக.....

இவ்வாறான எட்டு துறைகளின் கீழ் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய சட்ட ஒழுங்கு விதி முறைகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன.

நன்கு அவதானிப்பின் குறிப்பிட்ட ஒவ்வொரு துறையும் ஆசிரியர்களின் பல்வேறு வகிபாகங்களையே சுட்டி நிற்கின்றன. என்பதை அறியலாம்.

மேற்குறிப்பிட்ட எட்டு வகைகளுக்குள் அடங்காத வேறுசில பாத்திரங்களை ஏற்று அன்றாட கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் தம்மை செயற்படுத்துபவராக ஒரு ஆசிரியர் எவ்வாறு பங்கேற்கின்றார் என்பதை நோக்கின்....

வகுப்பறை ஒன்றில் மாணவர்கள் பலரும் பல்வேறு வகைக்குட்பட்டவர்கள் ஒரு ஆசிரியரானவர் தமது கற்பித்தல் நடவடிக்ககையினை மேற்கொள்வதற்கு முன்னர், குறிப்பிட்ட மாணவர்கள் அத்தனை பேரது மனவெழுச்சி நிலைகளையும் இனங்கண்டு அவர்களை கற்பித்தல் நடவடிக்கைக்கு ஆயத்தப்படுத்தி அதன் பின்னரேயே தமது கற்பித்தல் செயற்பட்டினை ஆரம்பிக்கின்றார்.

இந்த பாடப்பிரவேசமானது வெறும் சொல்லினால் அளந்து நிமிடக்கணக்கில் செய்து முடித்துவிட முடியும் என எண்ணுவது தவறு. இது வகுப்பிற்கு வகுப்பு வேறுபடுகிறது. மாணவரது வயது, குடும்பச் சூழல், சமூகச் சூழல், மாணவரது உடல் ஆரோக்கியம், மாணவரது அப்போதைய மனநிலை என்பவற்றை கருத்திற் கொண்டே பாடப்பிரவேசம் தீர்மானிக்கப்படுகின்றது. ஒவ்வொரு மாணவனையும் தனியாளாக இனங்கண்டு செயற்படுவது இலகுவானதல்ல என்பதால் மொத்த மாணவர்களுக்கும் பொதுவானதொரு பாடப்பிரவேசத்தை தீர்மானிக்கும் அந்த ஒரு நிலைக்கே ஒரு ஆசிரியரானவர் மிகுந்த பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றார்.

இதன் போது மாணவரது வயது மட்டத்திற்கு தாமும் இறங்கிஅவர்களது தனியாள் வேறுபாட்டிற்கு இணங்க தம்மை பல்வேறு பரிமாணங்களுக்கு மாற்றி பாட ஆயத்தத்தை மேற்கொள்கின்றார்.

இரு கண்கொண்டு சராசரியாக முப்பதுக்கும் அதிகமான மாணவர்களது அவதானிப்பை உற்று நோக்கும் அதிசயத்தை ஒவ்வொரு நாற்பது நிமிட பாடவேளையிலும் ஒரு ஆசிரியரானவர் மேற்கொள்கின்றார்.

இதன்படி வினைத்திறன் மிக்க கற்றல் கற்பித்தலை முன்னெடுப்பதற்கு ஒரு ஆசிரியரானவர் பல்வேறு வகிபாகங்களுடன் செயற்பட வேண்டுமென்பது இங்கே தெளிவாகின்றது.

மேலும் இடர்சிக்கிய மாணவர்களை மீட்டெடுப்பதற்கு சீர்மியர் என்ற நடிபங்கினை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியமை இன்றியமையாததொன்றாகும். தமது ஆசிரியப்பணி தொடர்பான துணிவும் சீர்மியம் சார்ந்த உளப்பாங்கும் ஆசிரியர்களுக்கு அத்தியாவசியமானவை தமது பலமும் பலவீனமும் பற்றிய தெளிவான புலக்காட்சியுடனேயே ஆசிரியர்கள் செயற்பட வேண்டியுள்ளதென்பது இங்கே நோக்கத்தக்கது.

பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் ஆசிரியத்துவத்தின் பரிமாணங்கள் குறித்து பின்வருமாறு கூறுகிறார்.

ஆசிரியத்துவத்தின் பரிமாணங்கள் பற்றிய ஆய்வின் முதற்கண் அதன் தொழிநுட்ப பரிமாணம் வலியுறுத்தப்படுகின்றது. ஆசிரியரது பாத்திரமேற்றல் இங்கு தொழிநுட்பவியலாளர் என்ற நிலையிலேயே தொழிற்பாடுகளை முன்னெடுக்கும் பொழுது புதிய மாற்றங்களை எளிதாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று கருதப்படுகிறது.

இவ்வாறு ஆசிரியரொருவரின் வகிபாகமானது பல்வேறு விதமாக பேசப்படுகின்ற நிலையில், ஆரம்பக் கல்வி ஆசிரியர்களின் வகிபாகமானது வேறுவிதமானதொரு பரிமாணத்துடன் நோக்கப்படுகின்றது.

செயற்பாட்டு கல்வியை அதிகளவில் மையப்படுத்தி நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஆரம்பக் கல்விக் கலைத்திட்டத்தில் ஆசிரியர் ஒருவரின் வகிபாகமானது பிரதானமாக நோக்குதற்குரியது.

மாணவர்களை முழுமையாக இணங்கண்டு நாளாந்தம் அவர்களுடன் இரண்டறக் கலந்த நிலையில் தொழிற்படும் நிலையிலேயே ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் தம்மை மாற்றிக் கொள்கின்றனர்.

விசேடமாக மனவெழுச்சிகளை விளங்கிக்கொள்ளல் எனும் எண்ணக்கருவினை மையப்படுத்தியே இவர்கள் செயற்பட வேண்டிய ஒரு நிலை இவர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. மாணவரது மனவெழுச்சிகளை அறிந்து உடனடியாகவும் நல்ல விளைவு தரக்கூடிய வகையிலும் துலங்குதல் சிறந்த பெறுபேறுகளை தரவல்லது. எனவே அதற்கொப்ப தம்மை தயார்படுத்தி மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் நேர் விசைகளை தூண்டுவதற்காக தமது மனவெழுச்சியினையும் நேர் தன்மையானதாக மாற்றிக்கொள்ள அதிகளவில் முயற்சி எடுக்கின்றனர்.

மாணவரின் நலன் கருதியும் பெற்றோர் நலன் கருதியும் ஆசிரியர்கள் தமக்குரிய எதிர்மனவெழுச்சிகளை தூரப்படுத்தி நேர்மனவெழுச்சிகளை வெளியிடும் இந்நிலையானது ஆசிரியரிடத்தே பாதகமான உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தும் அபாயகரம் உள்ளது என்பதுவும் இங்கே குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டிய ஒன்றாகும்.

இத்தகைய நிலையில் ஆரம்பவகுப்பு ஆசிரியர்கள் ஏற்கும் பாத்திரமானது முற்றிலும் வேறுபட்டே நோக்கப்படுகின்றது. அதாவது உடல் மொழி எனும் ஒரு வகையான மொழி பரிமாற்றத்தை பரஸ்பரம் மாணவ ஆசிரிய இடைத் தொடர்புகள் விளங்கிக் கொள்வதை அவதானிக்க முடிகிறது.

பேசும் மொழியின் கனவளவு, ஆசிரியர் நிற்கும் நிலை, உடலுறுப்புகளின் அசைவுகள் முதலியவற்றின் வாயிலாகவும் ஆசிரியரானவர் மாணவர்களுடன் தொடர்பு கொண்டு தமது கருத்தினை புலப்படுத்த முயற்சிக்கிறார் என்பது தெளிவு.

பேசும் சொல்லையும் விட பார்க்கும், வெளிப்படுத்தப்படும் உடல் மொழியே அதிக நம்பகரமானதாக கருதப்படுகிறது. சொல் சார்ந்த பேசும் மொழிக்கும், சொல் சாரா உடல் மொழிக்கும் இடையே முரண்பாடுகள் தோன்றும் போது மாணவர்கள் உடல் மொழியின் மீதே அதிக நம்பிக்கை வைக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.

இந்த தொடர்புகளை ஆசிரியர் நடைமுறைப்படுத்தும் பொழுதுதான் வினைத்திறனுள்ள கற்பித்தலை முதன்மை நிலைகளிலே முன்னெடுக்க முடிகிறது.

ஆக...... ஒரு ஆசிரியரானவர் பெரும்பாலான தமது கற்பித்தலை ஏதோ ஒரு பாத்திரமேற்றலின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படுவது தெளிவு.

இதந்கிணங்க ஆசிரியரானவர் தமது விருப்பு வெறுப்புகளை வலிந்து மறந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டுதான் வகுப்பறைக்குள் பிரவேசிக்கிறார்.

ஒவ்வொரு தனியாள் வேறுபாட்டுடனான மாணவனையும் உரிய முறையில் இனங்கண்டு அவர்களுக்குரிய அறிவை வழங்கும் ஆசிரியர்களது பிரயத்தனமானமு பாராட்டப்பட வேண்டியது மட்டுமல்ல அதிசயிக்கப்பட வேண்டியதாகும்.

(பிரமிளா பிரதீபன்)