(சிவம்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் 6950 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர் எனவும் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவல் அதிகூடிய மாற்றுத்திறனாளிகளாக 523 பேர் உள்ளனர் சமூக சேவைத் திணைக்களம் மாவட்ட உத்தியோகத்தர் எஸ். அருள்மொழி தெரிவித்தார்.
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அரச , சர்வதேச மற்றும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏற்பாடு செய்த விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு நகரில் இன்று புதன்கிழமை (03) இடம்பெற்றது.
'நிலையான அபிவிருத்திக்கான தொழில்நுட்பத்தின் உறுதி மொழி' எனும் தொனிப்பொருளில் நடாத்திய இவ் ஊர்வலம் மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் இருந்து ஆரம்பமாகி திருமலை வீதி வழியாக மட்டக்களப்பு கோட்டைமுனை செல்வநாயகம் மண்டபத்தைச் சென்றடைந்தது.
மாற்றுத் திறனாளிகளும் சாதிக்கக்ககூடியவர்கள், அவர்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு, சமூகத்தில் அவர்களையும் மதிக்க வேண்டும் போன்ற வலது குறைந்தோரின் உள்ளக் கிடக்கைகளை வெளிப்படுத்தும் பதாதைகளை ஏந்திச் சென்றனர்.
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம், மட்டக்களப்பு மாவட்ட வலது குறைந்தோர் அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து ஓசாணம், மென் கபே, புகலிடம், தரிசனம், உதயம், வாழ்வோசை உள்ளிட்ட பராமரிப்பு நிலையங்களில் உள்ளவர்களும் பங்கு பற்றினர்.