அம்பாறையில் தபாலகங்களிலும் வீட்டுத் தோட்டங்கள் அமைக்கத் திட்டம்

மகிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 10 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை உற்பத்தி செய்யும் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள தபால் அலுவலகங்களிலும் வீட்டுத் தோட்டங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அஞ்சல் அத்தியட்சர் கே.டபிள்யூ.எஸ்.ஜகத்குமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தபால் அதிபர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு அண்மையில் காரைதீவு தபால் அலுவலகத்தில் நடைபெற்றது. வீட்டுத் தோட்டங்கள் அமைக்க வேண்டியதன் முக்கியத்துவம், அதன் பயன்பாடு மற்றும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள "திவிநெகும' திட்டத்தின் நோக்கம் போன்ற விடயங்கள் தொடர்பாக தபால் அத்தியட்சரினால் விளக்கமளிக்கப்பட்டது. இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகள், விதைகள் போன்றவை விவசாயத் திணைக்களத்தினூடாக வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தினை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு சகல வழிகளிலும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதுடன், தபால் திணைக்களத்தினாலும் "திவிநெகும' திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு கூட்டுப்பொறுப்புடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கிழக்குப் பிராந்திய பிரதி தபால் மா அதிபர் கே.கனகசுந்தரம் பிரதம அதிதியாகவும் மட்டக்களப்பு அஞ்சல் பயிற்சிக் கல்லூரியின் பிரதம போதனாசிரியர் ஏ.நரேந்திரன், மாகாண நுண்ணாய்வு பரிசோதகர் எம்.தம்பி ஐயா, நிருவாக உத்தியோகத்தர் எஸ்.முகம்மட் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.