லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் குறைக்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3,000 ரூபாவிற்குள் வரையறுக்கப்படும் வகையில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளையதினம் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மாதாந்த எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைய இந்த வருடத்தில் நிறைவடைந்த ஆறு மாத காலத்தில் மாத்திரம் எரிவாயு சிலிண்டரின் விலை நான்கு தடவைகள் குறைக்கப்பட்டன.
உலக சந்தையில் எரிவாயு விலையின் வீழ்ச்சி,டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் தேசிய மட்டத்தில் ரூபாவின் பெறுமதி உயர்வு ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எரிவாயு விலை குறைக்கப்பட்டது.
ஜூலை மாதம் எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலையை அதிகபட்ச தொகையால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டர்களின் விலையும் குறைக்கப்படும் என்றார்.
எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைய கடந்த மாதம் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 452 ரூபாவினாலும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 181 ரூபாவினாலும், 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 83 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது.