மலையகத்துக்கான பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும் : கல்வி அமைச்சர்!

மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கொட்டகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

மலையகத்துக்கான பல்கலைக்கழகத்தின் அவசியத்துவம் பற்றி பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்த விடயத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் துரிதமாக செயற்பட்டார். ஜனாதிபதியுடன் பேசி அனுமதிபெற்று, எனக்கும் அறிவித்தார். நிதியை திரட்டுவதற்கான வேலைத்திட்டத்தை அமைச்சர் ஜீவன் தயாரித்துள்ளார். 

அரச நிதியை பயன்படுத்துவதற்கு முன்னர் அதனை பெற முடியும். நிதி வழிமுறைகள் தொடர்பான அறிவிப்பை அமைச்சர் வெளியிடுவார். பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு கொட்டகலை ஆசிரியர் கலாசாலை வளாகம் சிறந்த இடம். சூழவுள்ள பகுதியும் அரச காணியாகும். எனவே, எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைக்கு காணி பெறுவதிலும் சிக்கல் இருக்காது, முதலில் பல்கலைக்கழகத்தை நிறுவிவிட்டு, பின்னர் பீடங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளலாம்.

 நுவரெலியாவில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்கள் ஏனைய பகுதிகளுக்கே செல்கின்றனர். இங்கு பல்கலைக்கழகம் அமைந்தால் அதன்மூலம் அவர்கள் பயன்பெறுவார்கள். இன்று நான் கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டேன். இது தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடி இறுதி முடிவெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.